[வல்லமை] [MinTamil] சிங்கையில் திருமுறை மகாநாட்டில் பங்கேற்பு
 • அன்புள்ள டாக்டர் திரு காளைராஜன் மற்றும் நண்பர்களே! சிங்கப்பூரில் நடைபெற்ற
  திருமுறை மகாநாட்டில் பேசப்பட்ட என் உரை இதோ கீழே தரப்பட்டுள்ளது. தலைப்பு:
  தேவாரத்துக்கு அந்தப் பெயர் எப்போதிலிருந்து ஏற்பட்டது...

  (சில முகமன் வார்த்தைகள் நீக்கப்பட்டுள்ளன).

  அன்புடன்

  திவாகர்
  [image: Inline image 1]
  உடையாள் உன்றன் நடுவிருக்கு
  உடையாள் நடுவுள் நீயிருத்தி
  அடியேன் நடுவுள் இருவீரும்
  இருப்ப தானால் அடியேன்உன்
  அடியார் நடுவு ளிருக்கும்அரு
  ளைப் புரியாய்பொன்னம்பலத்தெம்
  முடியா முதலே என்கருத்து
  முடியும் வண்ணம் முன்னின்றே.

  சிங்கை வாழ் தமிழன்பர்கள் அனைவருக்கும் என் முதற்கண் வணக்கம்.
  விசாகையிலிருந்து சிங்கை வரை வரவழைத்த அந்த ஆதி சிவனுக்கு என் நன்றிகள்.

  இறைவன் தந்த மொழி தமிழ். ஆதிசிவன் பெற்றெடுத்தான் என்று மகாகவி பாரதியால்
  மதிப்புரை செய்யப்பட்ட மொழி தமிழ். அத்தகைய செந்தமிழுக்கும்
  தமிழருலகத்தாருக்கும் சிறப்பாக ஏதேனும் செய்யவேண்டுமென இறைவனின் திரு உள்ளம்
  ஆசைப்பட்டதால் எழுந்ததுதான் திருமுறைகள். இந்தத் திருப்பதியங்கள் பாடியவர்கள்
  அனைவருமே இறைவனின் தூதர்கள். சாதாரணத் தூதர்கள் அல்லர். இம்மண்ணுலகில் வாழும்
  மனிதரைப் போலவே பிறவியெடுத்ததோடு மட்டுமல்லாமல் மண்ணுலகில் மாந்தர்கள்
  எவ்வாறெல்லாம் வாழவேண்டும் என்று வ்ழிவகை செய்து கொடுத்த மாணிக்கத் தூதர்கள்.
  ஏதோ பிறக்கிறோம், வளர்கிறோம், உலகின் அனைத்து சுகதுக்கங்களை அனுபவித்து
  அதற்கேற்ப வினைகளை சம்பாதித்துக் கொண்டு போய் விடுகிறோம். இருவினைகளுக்கேற்ப
  மறுபடியும் எல்லாப் பிறவிகளையும் பிறந்துகொண்டே இப்படி சக்கரம் போல
  சுழன்றுகொண்டே அனுபவிக்கின்றோம். இப்படியே போய்க்கொண்டிருப்பதுதான்
  மனிதப்பிறவி அல்லது ஏதாவது ஒரு பிறவி எடுத்ததன் லட்சணமா என்று கேட்டால்
  ’இல்லை’ என்றுதான் நம் சமயப் பெரியோர்கள் நமக்கு எடுத்துரைக்கின்றனர். பக்தி
  அதுவும் இறைவனின் மேல் பக்தி கொள்வது மட்டுமே நாம் செய்யக்கூடிய செயலாக
  இருந்தால் போதுமானது என்று நம் வாழ்க்கையை எளிமைப்படுத்திச் சொல்கிறார்கள்
  அவர்கள். ‘புழுவாய்ப் பிறக்கினும் புண்ணியா உன்னடி என் மனத்தே வழுவாதிருக்க
  வரந்தர வேண்டுகிறேன்’ என்று அப்பரடிகள் இறைவனைப் பார்த்துக் கேட்பது
  நமக்காகத்தான். அவருக்காக அல்ல. சாதாரண புழுவிலிருந்து மேம்பட்டு பற்பல
  அவதாரங்களில் புகுந்து அரியக் கிடைத்த மானிடராய் பிறந்த நமக்கு பக்தி என்ற
  உணர்ச்சியினால் ஆண்டவனைப் பற்றிக் கொள்ளும் மிகப் பெரிய வாய்ப்பாகப்
  பயன்படுத்தப்படவேண்டும் என்பதே இதன் மையக் கருத்து. இப்படிப்பட்ட பக்தியை
  எத்தனையோ நூற்றாண்டுகளுக்கு முன்பாகவே எதிர்காலத்தவருக்குப் பயன்படவேண்டுமென்ற
  உத்தம எண்ணத்தோடு தம் தூதர்களை பூவுலகுக்கு அனுப்பி அவர்கள் மூலம் தமிழ் எனும்
  இறைமொழியில் தேவாரம் திருவாசம திருமுறைப்பாடல்களைக் கொடுத்தனுப்பிய அந்த
  ஆதிசிவனைப் போற்றி எனதுரையைத் தொடங்குகிறேன்.

  நான் இங்கே பேசப்போவதெல்லாம் நாம் இப்போது பாடுகின்ற மூவர் பாடிய தெய்வீகப்
  பாடல்களுக்கு தேவாரம் என்ற பெயர்ச் சொல் எந்தக் காலத்திலிருந்து
  வந்திருக்கவேண்டுமென்பதுதான். ஏதோ சாதாரணமாக இதுபற்றி ஆரம்பித்த என்னுடைய இந்த
  ஆராய்ச்சி ஆதிசிவனின் அருளால் எங்கெங்கோ என்னை அழைத்துச் சென்றதுதான். அந்த
  என்னுடைய ஆராய்ச்சியின் தொகுப்பைத்தான் உங்களுடன் பகிர்ந்து கொள்ள
  வந்திருக்கிறேன்.

  பழந்தமிழ் தெய்வீகப்பாடல்கள் என்றால் முதலில் தமிழர்தம் நாவில் வருவது
  தேவாரம் என்ற சொல்தான்.. 'நாவிற்கினியது தேவாரம்' என்போர் பெரியோர். ’நல்லோர்
  நாவில் நவில்வது தேவாரமே’ என்ற வாசகத்தை தென்னாட்டில் சில சிவன் கோவில்களில்
  எழுதி வைத்திருப்பதைக் காணலாம். ஒருமுறை திருவானைக்கா ஜம்புகேசுவரர்
  சன்னிதியில் ஒரு பெண்மணி தனியாக ஒரு மூலையில் கண்ணீர் பெருக தேவாரம்
  பாடிக்கொண்டு இருந்ததை நெகிழ்ச்சியாகப் பார்த்ததுண்டு. தேவாரம் பாடும்போதே
  அதன் பொருளை உணர்ந்துகொண்டு பாடினோமேயானால் இப்படிப்பட்ட உணர்ச்சிகரமான
  கட்டங்களை நாமும் அனுபவிப்போம். தேவாரப் பாடல்களில் பல பாடல்கள் இன்னின்ன
  பலன்களைத் தருகின்றன என்று பட்டியலே இடலாம். தமிழகத்தில் பலர் இல்லத்
  திருமணங்களில் இப்படிப் பலன் தரக்கூடிய தேவாரப் பாடல்கள் சிறு சிறு
  புத்தகங்களாக அச்சடிக்கப்பட்டு திருமணத்தில் பங்கு பெறுவோருக்கு இலவசமாகத்
  தருவதைப் பார்த்திருக்கிறோம். அதே சமயத்தில் தேவாரப்பாடல்கள் மூலம் எத்தனையோ
  அற்புதங்கள் நிகழ்ந்ததையும் நாம் படித்திருக்கிறோம்.

  இந்தத் ’தேவாரம்’ என்ற பெயர் இந்தப் பாடல்களுக்கு எப்படி எப்போது
  வந்திருக்கும் என்ற கேள்வி என்னுள் வெகு நாட்களாகவே உண்டு. அவ்வப்போது இவை
  பற்றிக் குறிப்புகள் கிடைக்கும்போதெல்லாம் பத்திரப்படுத்திக்கொள்வதுண்டு.
  அத்துடன் இந்தத் தெய்வீகப் பாடல்கள் மூவர் காலத்திற்குப் பின் சில நூறு
  ஆண்டுகள் மறைந்து விட்டதாகச் சொல்லப்படுகிறதே, அதுவும் சரிதானா என்ற
  கேள்வியும் அவ்வப்போது எழுவதுண்டு. ராஜராஜ சோழன் தில்லையில் தேவார ஏடுகளைக்
  கண்டெடுக்காவிட்டால் தேவாரம் எனும் பொக்கிஷம் நமக்குக் கிடைத்திருக்க
  வாய்ப்பில்லை என்றும் சொல்பவர்கள் நிறைய பேர் உண்டு.

  தேவாரத்துக்குள்ள ஒரு முக்கியமான பெருமையை நாம் உணர்ந்துகொள்ளவேண்டும்.
  உலகமனைத்தும் உள்ள தமிழர்களெல்லாம் பெருமைப்படவேண்டிய விஷயம் அது.. உலகத்தில்
  வரையப்பட்ட அல்லது எழுதப்பட்ட அல்லது பாடப்பட்ட எந்த ஒரு எழுத்து
  இலக்கியத்துக்கும் இல்லாத ஒரு பெருமை தேவாரத்துக்கு மட்டுமே உண்டு. அது
  என்னவென்றால் மிக அதிகமான அளவில் சரித்திர ஆவணங்களாக கல்வெட்டுகளில்
  காணப்படுவது மூவர் பாடிய பாடல்களைப் பற்றியது மட்டுமே.

  தேவாரம் என்றால் தே-வாரம் என இரண்டாகப்பிரிந்து தெய்வத்தின் மீது பாடப்பட்ட
  சொல்லொழுக்கமும் இசையொழுக்கமும் பொருந்திய பாடல் எனப் பொருள் படும். இந்தக்
  காலத்தில் இதற்குப் பொருள் கொள்ளவேண்டுமென்றால் தே என்பதற்கு தேவன் அல்லது
  தெய்வம் எனப் பொருள் கொள்வார்கள். வாரம் எனும் சொல் சிலப்பதிகாரத்தில்
  வருகிறது. ‘வாரம் பாடும் தோரிய மடந்தையும்’ என வரும் வார்த்தையால் வாரம்
  என்றால் இசையோடு கூடிய பாடல் என்று இதற்கான காரணத்தைக் கூறுகிறார்கள்.
  "வாரமாய் வணங்கு வார் வல்வினைகள் மாயுமே" என்பது ஞானசம்பந்தர் திருவாக்கு.

  மேலும், வாரம் என்றால் உரிமை எனப் பொருள் கொள்ளலாம் என சைவ சித்தாந்த
  கட்டுரைகளில் காணப்படுகின்றன.. இறைவனுக்கும் உயிர்கட்கும் உள்ள தொடர்பை -
  உரிமையை உள்ளவாறு தெளிவித்து உயிர்கள் பயன்பெற உதவும் பாடல்கள் கொண்ட நூல்
  என்ற பொருளும் இதற்கு உண்டு என்பதைக் காணலாம்.
  இன்னும் சிலர் தே-ஆரம் அதாவது தெய்வத்துக்கு அணிவிக்கப்படும் பாமாலை, அணிகலனாக
  பொருள் கொள்கிறார்கள்.

  ஆனாலும் தேடித் தேடிப்பார்க்கையில் தேவாரம் எனும் ஒரு சொல்லை, அப்பரடிகளோ,
  சம்பந்தப் பெருமானோ, சுந்தரமூர்த்திநம்பிகளோ அல்லது பின் வந்த திருமுறை
  ஆசிரியர்களான நம்பியாண்டார் நம்பி, சேக்கிழார் போன்றோர்களோ குறிப்பிடவில்லை.
  தேவாரம் என்று இப்போது நாம் பாடுகின்ற திருப்பதிகங்களுக்கு சோழர்காலத்திலே
  அந்தப் பெயரால் யாரும் குறிப்பிடவில்லை.

  தேவாரப் பாடல் தோன்றிய காலம் பல்லவ அரசர்கள் புகழ்பெற்றிருந்த காலம் என்பதை
  அனைவரும் அறிவோம். மகேந்திர பல்லவன் முதல் இரண்டாம் நரசிம்மன் எனப் பெயர்கொண்ட
  ராஜசிம்ம பல்லவன் காலம் வரை தேவாரப் பாடல்கள் காலமாக வரலாற்று ஆசிரியர்கள்
  வரையறுத்துள்ளனர். பாரதத்தின் பண்பாட்டு வேராகக் கணிக்கப்பட்ட சநாதன தர்மம்
  தென்னகத்தில் மிகப் பிரதானமாகப் போற்றப்பட்டு வளர்க்கப்பட்டது கூட பல்லவர்களான
  இவர்கள் காலத்திலிருந்துதான். வட இந்தியாவில் காசி க்ஷேத்திரமும்
  தென்னிந்தியாவில் காஞ்சி மகாநகரமும் அந்த கால கட்டத்தில் சனாதன தர்மத்தின்
  கோட்டைகளாக இருந்ததை திரு எஸ்.என். தாஸ் குப்தா தன் ‘’ஹிஸ்டரி ஆஃப் இண்டியன்
  பிலாஸபி’ புத்தகத்தில் குறிப்பிடுகிறார். ஏழாம் நூற்றாண்டு காலம் வரை
  கோவில்களிலோ நடைமுறையிலோ அவ்வளவு அதிகமாகக் காணப்படாத ஆகம விதானங்கள் அதிக
  அளவில் கடைபிடிக்கப்பட்டதை அவர் விவரிக்கின்றார். கி.பி, 7ஆம்
  நூற்றாண்டிலிருந்து அதிக அளவில் ஆகம விதிகளின் படி தென்னகத்தில் அதுவும்
  தமிழகத்தில் நூற்றுக்கணக்கில் கோயில்கள் எழுப்பப்பட்டதையும் வழிபாட்டு
  முறையிலும் பூசை விதானத்திலும். வடமொழி வேதாகம விதிகளோடு தமிழும்
  சேர்க்கப்பட்டதையும் விவரிப்பது ஒரு முக்கியமான விஷயம். இங்கு தமிழ் என்பது
  நிச்சயம் தேவார பாடகள்தான் என்பதையும் நினைவில் கொள்ளவேண்டும்.

  பழைய காலத்தில் தேவாரப்பாடல்களைப் பாடுவதற்காக வழங்கப்பட்ட நிவந்தங்கள் பற்றிய
  வரலாற்றுக் குறிப்புகள் ஏராளமான கல்வெட்டுகளாக நமக்குக் கிடைத்திருக்கின்றன.
  தமிழில், வடமொழியில் என பாடல்பெற்ற தலங்களில் எல்லாம் இந்தத்
  தேவாரப்பாடலுக்காக ஏதாவது ஒரு கொடை வழங்கும் நிகழ்வாக அந்தக் கல்வெட்டில்
  பதியப்பெற்றதை நினைக்கும்போதே நமக்கு உள்ளம் குளிர்கிறது. வேறு எந்த
  இலக்கியத்துக்கும் கிடைக்காத பெருமையை அன்றைய மக்களும் மன்னர்களும்
  தேவாரப்பாடலுக்கு அளித்திருக்கிறார்கள் என்பதையும் பார்க்கும்போது அந்தப்
  பாடல்கள் எந்த அளவில் ஒரு மாபெரும் சக்தியாக உருவெடுத்து நாநிலத்தில் உள்ளோரை
  பக்திப் பரவசத்தில் ஆழ்த்தியிருக்கவேண்டும் என்றும் வியக்கத் தோன்றுகிறது.
  சிவபாதசேகரனாகிய ராஜ ராஜ சோழன் காலத்திலேயே நூற்றுக்கணக்கில் வடக்கே ஆந்திர
  தேசத்திலிருந்து தென்கோடி ஈழம் வரை மூவர் பாடல்கள் மிக அதிகமாகப்
  பாடப்படுவதற்கான உதவிகள் வழங்கப்பட்ட கல்வெட்டுகள் வழங்கப்பட்டு அவை இன்று
  நமக்கு கிடைத்தும் உள்ளன.

  ஆனால் இத்தகைய வரலாற்றுக் குறிப்புகள் எல்லாம் தேவாரம் என்ற பெயரை இந்தப்
  பாடல்களுக்குக் குறிப்பிடவில்லை என்பதுதான் இங்கே ஆச்சரியம். அதே சமயத்தில்
  வேறு ஒரு பொருள் கொண்டு அந்தத் தேவாரம் எனும் சொல் நம் சொல்வழக்கில் அந்தக்
  காலத்திலே இருந்தது. தேவாரம் என்றால் வழிபாடு, வழிபடுதல், வணங்குதல், அதன் வழி
  செல்லல் என்னும் பொருளில்தான் இருந்தது. இதில் வேடிக்கை என்னவென்றால் வழிபாடு
  என்று பொருள் தரக்கூடிய தேவாரம் எனும் சொல் கல்வெட்டுகளில் ஒன்பதாம்
  நூற்றாண்டிலிருந்தே காணப்படுகின்றன. இந்த மன்னர் இந்தத் திருப்பதியம் பாடி
  தேவாரம் செய்வதற்காக (அதாவது கோயிலில் திருப்பதிகங்கள் பாடி வழ்பாடு செய்தல்
  எனும் பொருளில்) இந்த நிவந்தங்கள் அளித்தார் எனும்படியான கல்வெட்டுகள்
  ஒன்பதாம் நூற்றாண்டு பல்லவ நந்திவர்மன் முதல் 13 ஆம் நூற்றாண்டு பிற்காலக்
  கடைச் சோழவம்சம் வரை காணப்படுகின்றன.

  ஒரு சில கல்வெட்டுகளைப் பற்றி மட்டும் உதாரணமாக குறிப்பாகச் சொல்கிறேன்.

  அரசன்: முதலாம் ராசேந்திரன். இடம்: கங்கை கொண்ட சோழபுரம்:(கல்வெட்டு உள்ள இடம்
  - பெரிய கோயில் தஞ்சை)
  செய்தி: உடையார் ஸ்ரீராஜேந்திர சோழதேவர் கங்கை கொண்ட சோழபுரத்து
  கோயிலுனுள்ளால் முடிகொண்டசோழன் திருமாளிகையில் வடபக்கத்து ’தேவாரத்து’ச்
  சுற்றுக் கல்லூரியில் தானம் செய்தருளாயிருந்து உடையார்ஸ்ரீ ராஜராஜ
  ஈசுவரமுடையார் கோயிலில் ஆசாரிய போகம் நம் உடையார்
  சர்வசிவபண்டிதைசைவாசிரியர்க்கு (vol 2, SII no.20)

  இங்கே தேவாரத்துச் சுற்றுச் சுவரில் என்பது வழிபாடு செய்யும் அறைக்கான
  சுற்றுச் சுவர் என்பதாக பொருள் படும். தேவாரம் என்றால் வழிபாடு என்பதுதான்
  அது. அதே சமயத்தில் இந்த வழிபாட்டறைகளை முறையே சீர்செய்து ஒவ்வொரு நாளும்
  அரசருக்கான தேவைகளை அந்த அறையைக் காண்காணிக்கும் அதிகாரிக்கு ‘தேவார நாயகம்’
  எனப் பெயர் அதாவது அப்பதவியின் பெயர் கொண்டு அறியலாம். இதே ராசேந்திர சோழன்
  ஆட்சிக் காலத்தில் ஐந்தாம் ஆண்டில் பதஞ்சலிப் பிடாரன் என்போன் இத்தகைய தேவார
  நாயகமாகப் பணியில் இருந்தான் என்பதை (EI no. 97 of 1932) ஓர் கல்வெட்டு
  தெரிவிக்கின்றது.

  பதினோராம் நூற்றாண்டிலும் தொடர்ந்து பன்னிரெண்டாம் நூற்றாண்டிலும் தேவாரம்
  என்பது வழிபாட்டுக்குரிய சொல்லே என்பதை இன்னொரு கல்வெட்டு ஊர்ஜிதம் செய்கிறது.

  காலம்: முதலாம் குலோத்துங்கன், இடம்: திருக்களர்
  செய்தி: நம் தேவாரத்துக்கு திருப்பதியம்பாடும் பெரியயோன் மறைதேடும்
  பொருளான.... அகளங்கப்பிரியனுக்கும்.... வம்சத்தார்க்கும் காணியாக....
  செய்யக்கடவன எல்லாம் செய்யப்பண்ணி.... இப்படிக்கு கல்வெட்டு பண்ணுக – இது
  திருவாய்மொழிந்தருளிய திருமுகப்படி’ SII Vol 8 no.260)

  தென்னகத்தின் பொற்காலமாகிய சோழர்களின் காலத்தில் நாம் இன்று புழங்கும் தேவாரப்
  பாடல்கள் அனைத்தும் ‘திருப்பதியம்’ திருப்பதியப் பாடல்கள், பதியம் என்றே
  அழைக்கப்பட்டது. அதே போல அந்தப் பதியங்கள் சார்ந்த அரசக் கட்டளைகளிலும்
  பொறிக்கப்பட்டது.

  சைவ சம்யப் பெருந்தகையான உமாபதிச் சிவம் 14 ஆம் நூற்றாண்டின் முதல் பகுதியில்
  வாழ்ந்த சந்தானக் குரவர் என்பது உங்கள் எல்லோருக்கும் தெரியும். சேக்கிழார்
  சுவாமிகளின் வரலாற்றிலும் சரி, அதே போல அவர் எழுதிய திருமுறை கண்ட
  வரலாற்றிலும் சரி, எந்த ஒரு இடத்திலும் தேவாரம் எனும் பெயரை உமாபதி சிவனார்
  எழுதவில்லை. திருப்பதியம் என்றே அந்தப் பாடல்கள் வழங்கப்பட்டதாக எழுதினார்.

  திருப்பதியங்களை சோழர்கள் காலத்தில் மிகப் பெரிய அளவில் பரப்பி வைத்தனர்.
  ஒவ்வொரு பிரதான சிவன் கோயிலிலும் திருப்பதியம் பாடும் முதலிகளும்
  அவர்களுக்குத் தலைவராக பதிகங்களில் மிகவும் ஞானம் பெற்ற நல்லாசிரியர்
  ஒருவரையும் நியமித்தனர். பராந்தக சோழன் சோழ சாம்ராஜ்யத்தை மிகப் பெரிய அளவில்
  ஸ்தாபிக்க வழி வகை செய்தவன் என்பது எல்லோருக்கும் தெரியும். இந்தச் சோழன்
  ஒவ்வொரு கோயிலிலும் திருப்பதியப்பாடல்கள் வழிபாட்டில் அதாவது ஆகம் வழிபாட்டில்
  கலந்து வழிபாடு செய்ய வழி வகுத்தவன். முதன் முதலாக இவனால்தான் மூவர்களான
  அப்பர் சுவாமிகள், சம்பந்தப் பெருமான், சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள்
  இவர்களுக்குத் திருவுருவச் சிலை செய்து தேவாரம் செய்ததாக அதாவது வழிபட்டதாக
  சரித்திரக் கல்வெட்டுகள் சொல்கின்றன. ஒன்று நன்றாகவே புரியும்..
  திருப்பதிகங்கள் எல்லாக் கோயில்களிலும் மூவர் காலத்துக்குப் பின்னரே ஓதப்பட்டு
  வழிபாடுமுறையாகப் பின்பற்ற்ப்பட்டு வந்தன என்பது.

  சரி, அப்படியானால் ராஜராஜ சோழன் தில்லை அம்பலத்தில் தேவார ஓலைகளை நம்பி
  ஆண்டார் நம்பி தயவில் ஒரு அறையில் கண்டெடுத்தான் என்று சொல்கின்றனரே.. அது
  எப்படி.. ராஜராஜசோழன் என்ற அரசனாலா தேவாரம் கண்டுபிடிக்கப்பட்டது? அது வரை
  திருப்பதியங்கள் தில்லையிலேயே மறைந்து கிடந்தனவா என்று கேள்வி வரும் இல்லையா?
  தெய்வீகப்பாடல்கள் ஆயிற்றே.. அதுவும் அதே சமயத்தில் மூவர் முதலிகளின் பாடல்கள்
  அவர்கள் காலத்திலிருந்தே அழியா வரம் பெற்றவை. அதில் பல பாடல்களால் அற்புதங்கள்
  நிகழ்த்தப்பட்டவை.. அப்படி இருக்கையில் இடைப்பட்ட முன்னூறு ஆண்டுகள் ஏன்
  மறைந்திருக்கவேண்டும்.. ஏன் மறைத்து வைக்கப்பட்டிருக்கவேண்டும் –
  இப்படியெல்லாம் கேள்விகள் எழுவதற்கு வாய்ப்பு இருக்கிறது அல்லவா.. இந்தக்
  கேள்விக்குப் பதில் வேண்டுமென்றால் நாம் ராஜராஜன் இந்தக் கோயிலுக்கு அவன்
  இந்தச் சம்பவத்துக்காக வந்த வரலாற்றைச் சரியாக ஆராயவேண்டும்...

  ஆனால் மூவர் பாடிய பாடல்களுக்கு என்றுமே, அது இடைப்பட்ட காலமாக
  இருந்திருந்தாலும், அழிவில்லைதான். அவர்களின் பாடல்கள் ராஜராஜ சோழன்
  காலத்துக்கு முன்பேயே கோவில்கள்தோறும் பாடப்பட்டு வந்தன.

  திருவாரூர் கோயிலிலே ராஜராஜன் ஒரு ஓதுவார் பாடிக் கொண்டிருந்த திருப்பதியம்
  பாடல்கள் முற்றுப் பெறாமலேயே இருப்பதைக் கவனிக்கிறான். அவரிடம் கேட்கிறான்.
  ஐயா.. திருப்பதியம் என்றால் பத்துப் பாடல்கள் அல்லவா.. நீங்கள் இப்போது பாடிக்
  கொண்டிருந்ததில் பத்துப் பாடல்களும் இல்லையே.. மீதி எங்கே என்பதுதான் அவன்
  கேள்வி. ஆனால் ஓதுவாரிடமிருந்து பதில் சரியாக வரவில்லை. கிடைத்தவற்றை வைத்து
  அவர் திருப்பதியம் ஓதிக் கொண்டிருக்கிறார். அதாவது மூவர் பாடல்கள் ஓதப்
  படுகின்றன. ஆனால் அதே சமயத்தில் அவை மூலைக்கு மூலை சிதறிக் கிடக்கின்றன.
  எந்தப் பதிகம் எந்த ஊர் என்பது சரியாகக் கணிக்கமுடியவில்லை. ஆலயத்தில் அருளும்
  ஈசன் பெயரில் பாடல் உருப்பெற்றாலும் சிதறிக்கிடந்தமையை சீர் செய்ய முடியாத
  நிலை.முறைப்படுத்தமுடியாத நிலையில் இருக்கின்றன. இந்த நிலையைத்தான் சீர்
  செய்தான் ராஜராஜசோழன். முறை செய்தான். அதனால்தான் அவனுக்கு திருமுறை கண்ட
  சோழன் என்ற பெயரையும் பெற்றான். எப்படி இதைச் சீர் செய்தான்?.

  திருவாரூர் கோவிலில் சோழ மாமன்னன் ராஜ ராஜ சோழன் தேவாரப்பாடல் ஒன்றைக்
  கேட்கப்போய், அதன் சுவையில் ஒன்றி, மொத்த பதிகத்தையும் பாடி அருளும்படி அந்த
  பக்தரைக் கேட்டான் இல்லையா.. ஆனால் அதற்குப் பதில் சரிவரக் கிடைக்க
  வில்லையாதலால, அவைகளை எப்படியாவது கண்டு பிடிக்கவேண்டும் என்று நாடுதோறும் தேட
  ஆரம்பித்தான்.. அச்சமயம் திருநாறையூரில் பொல்லாப்பிள்ளையார் அருளால் நம்பி
  ஆண்டார் நம்பி மூலம் இந்த ஓலைகள் முழுதும் தில்லையில் உள்ளது என்ற செய்தி
  கிடைத்ததும், அவரையும் அழைத்துக்கொண்டு தில்லைக்கோயிலில் திருப்பதியப் பாடல்
  ஓலைகள் கண்டெடுக்கப்பட்டதும், நம்பி ஆண்டார் நம்பியவர்கள் ஏழு திருமுறைகளாக
  வகுத்து முறை செய்தார்.

  இந்தச் சம்பவத்தைத்தான் திருமுறை கண்ட புராணம் என்ற பெயரில் சைவசிவாச்சாரியம்
  உமாவதி சிவனார் சுவைபட பாடியுள்ளார்.

  ராஜராஜ சோழன் காலத்துக்குப் பிறகுதான் முறைப்படுத்தப்பட்ட திருப்பதிகங்கள்
  திருக்கோயில்தோறும் முறைப்படிப் பாடத் துவங்கினர். அதாவது திருப்பதிகங்கள்
  முறைப்படி கோயிலுக்கென்று முறைப்படி தொகுக்கப் பெற்று முறைப்படி பண் அமைத்து
  முறைப்படி தகுதி பெற்ற ஞானாசியர்களின் மேற்பார்வையில் முறையான ஓதுவார்கள்
  மூலம் முறையாக தேவாரம் செய்யப்பட்டது. அதாவது வழிபாடு செய்யப்பட்டது.

  ராஜராஜ காலத்தில் திருப்பதியங்களுக்கு தேவாரப்பாடல்கள் என்று வழக்கம்
  கொண்டாடியதில்லை. ராஜராஜன் காலத்துக்குப் பின் வந்த அரசர்களால்
  திருப்பதியப்பாடல்கள் மென்மேலும் பெருமைப்படுத்தப்பட்டன..

  விக்கிரம சோழனின் முதலமைச்சர் பெயர் காளிங்கராயன். இவன் தில்லையில் ஏழு
  திருமுறைப்பாடல்களையும் செப்புப் பட்டயத்தில் எழுத வைத்தான். வேலை முடிந்ததும்
  இதற்கான அறிவிப்பை, அதாவது திருப்பதியங்கள் செப்புப் பட்டயத்தில்
  செதுக்கப்பட்டன் எனும் வார்த்தையை ஒரு கல்வெட்டாகவும் செதுக்கி வைத்தான்.
  விக்கிரம சோழனின் காலம் கி.பி. 1120 முதல் 1135 வரை. இவனுக்குப் பின் வந்த
  இரண்டாம் குலோத்துங்க சோழன் ஒரு கோயிலில் தானே சென்று திருப்பதியம்
  பாடுவானாம். இது அவனுக்கான உரிமையாக எடுத்துக் கொண்டான். ஆட்சியாளர்களுக்கு
  எப்போதும் வெவ்வேறு கடமைகள் குறிக்கிடுவதால் தன் திருப்பதியம் பாடும் உரிமையை
  இன்னொரு ஞானாசிரியருக்கு வழங்குவதாக ஒரு கல்வெட்டு செய்தி சொல்கிறது என்றால்
  இந்த சோழ மகாராஜாக்கள் திருப்பதிகங்களை எந்த அளவில் போற்றினார்கள் என்று
  கவனிக்கவேண்டும்.

  பதின்மூன்றாம் நூற்றாண்டில் சோழ ராஜ்ஜியம் கடைசி கட்டத்தை எட்டிப்பார்த்தது.
  எத்தனைதான் குறுகிய எண்ணம் கொண்ட ராஜாக்கள் எல்லோரும் சேர்ந்து ஒருவரோடு
  ஒருவர் சண்டை போட்டுக் கொண்டு சோழ ராஜ்ஜியத்தைக் குறுக்கச் செய்தாலும்,
  அவர்கள் மனம் சைவத் திருக்கோயில் வழிபாட்டில் மட்டும் ஒன்றாகத்தான் வேலை
  செய்தது. அரசர்கள் அவ்வப்போது மாறினாலும் திருக்கோயில் வழிபாட்டு முறையை
  மற்றும் மாற்றவில்லை. வெளியிலே சண்டை போட்டுக் கொண்டாலும் ஆலயத்துக்குள்
  சென்று திருப்பதியம் பாடுவதையும் நிறுத்திக் கொள்ளவில்லை. அந்தக் கடைசி
  சோழர்களிடமிருந்து சிதம்பரத்தைக் கைபிடித்த ஒரு பல்லவ அரசன் கோப்பெருஞ்சிங்கன்
  என்ற பெயருடையோன். மிகப் பெரிய சிவபக்தன்.. அவன் சிவபக்தியைப் புகழ்ந்து
  செய்யுள் வடிவில் ஒரு கல்வெட்டாக செதுக்கி இருக்கிறார்கள். அதில் தேவாரம் என்ற
  சொல் வரும். அதாவது

  “விளங்கு செம்பொனின் அம்பலக் கூத்துநீ விரும்பிய தேவாரம்”

  என்கிற வாசகம் கிடைக்கும். ஆனால் இதன் பொருள் பொன்னம்பலக் கூத்தனை விரும்பி
  வழிபடுவதுதான் இவனுக்குப் பிடிக்கும் என்று பொருள் தரும். இவன் 13 ஆம்
  நூற்றாண்டைச் சேர்ந்தவன். ஆக இந்தக் காலத்திலும் தேவாரம் என்ற சொல்லுக்கு
  வழிபாடு என்றுதான் பொருள் வருகிறது. பின்னர் ஏற்கனவே சொன்னது உமாபதியாரின்
  காலம் பதினான்காம் நூற்றாண்டு வருகின்றது, அவரும் திருப்பதியம் என்றே
  அழைக்கிறார்.

  சரி, எப்போது திருப்பதியங்கள் தேவாரம் ஆனது?

  ஆனால் இதே நூற்றாண்டில் 1330-40 ஆண்டு வாக்கில் தொண்டை மண்டலத்தில் ராச நாராயண
  மல்லிநாத சம்புவரையன் என்போன் ஆண்ட சமயத்தில் இரட்டைப் புலவர்கள் என்று
  சொல்லப்பட்ட முதுசூரியனாரும், இளஞ்சூரியனாரும் சேர்ந்து பாட்டுகள் எழுதிப்
  பாடுபவர்கள். சிவபக்த சிரோன்மணிகள். தில்லையம்பலத்தானை போற்றியும் காஞ்சியில்
  குடிகொண்ட ஏகாம்பரனைப் போற்றியும் இவர்கள் பாடிய பாடல்கள் தமிழ் இலக்கியவானில்
  அக்காலத்தில் ஒளி வீசியவை. இவர்கள் பாடிய ’ஏகாம்பரநாதருலா’ எனும் நூலில்தான்
  முதன் முறையாக திருப்பதிகங்கள் ‘தேவாரம்’ என்றழைக்கப்படுகின்றன.

  மூவாத பேரன்பின்மூவர் முதலிகளும்
  தேவாரஞ்செய்த திருப்பாட்டும்

  என ஏகாம்பரநாதருலாவில் இந்த இரட்டையர்கள் எழுதிப் பாடினார்கள். பேரரசர் என்று
  ஒருவர் இல்லாமல் சிற்றரசர்கள் மலிந்திருந்த அந்தக் காலத்தில் இந்த இரட்டையர்
  ஊர் ஊராகச் சென்று திருப்பதியப் பாடல்களையும் விருப்பத்துடன் பாடுவார்களாம்.
  இதில் முதுசூரியனார் கால்கள் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்தவர். இளஞ்சூரியனாரோ
  கண்ணிழந்தவர். இளஞ்சூரியனார் தோளில் முதுசூரியனார் நாடெங்கும் பயணம் செய்து
  சிவத்தலங்கள் செல்வர். தங்கத்தில் எத்தனை குறை இருந்தாலும் தரத்தில் குறையாது
  என்ற கவியரசர் பாட்டுக்கேற்ப இந்த இரட்டைப் புலவர்கள், தங்கள் உடலில் ஏற்பட்ட
  குறைகளைப் பொருட்படுத்தாமல் ஞானத்தால் தமிழை வரித்த்தோடு மூவர் புகழையும்
  பரப்பிய இந்த சிவபக்தர்களால் பாடப்பட்ட் திருப்பதியத்துக்கு சாதாரண
  பக்தர்களின் வாயால் தேவாரம் எனும் பெயர் சூட்டப்பட்டு பாடப்பட்டதால்
  இவர்களுக்கு தேவாரப் புலவர்கள் என்று ஒரு பெயரும் ஏற்பட்டது. இவர்களால்
  திருப்பதியத்துக்கு இன்றளவும் இறை பக்தர்களால் சிலாகிக்கப்படுகின்றது.
  சித்தமும் செல்லா சேட்சியன் காண்க; பத்தரின் வலையில் படுவோன் காண்க – என்பது
  மணிவாசகரின் பாடல். சித்தங்களினால் பெறப்படும் ஞானங்களினால் அறியப்படாத அவன்
  சாதாரணபக்தர்களின் பக்தி எனும் வலையில் தானே வந்து விழுவானாம். அதைப் போல
  சாதாரண மக்கள் பேச்சு வழக்கில் திருப்பதியங்களுக்குக் கொடுத்த பெயர்தான்
  தேவாரம். திருப்பதியங்களே நம் வழிபாடு என்றும் அவர்களே எடுத்துக் காட்டாக
  செயல்பட்டனர்.

  எனவே ஏறத்தாழ 600 ஆண்டுகளுக்கு முன்பு வரை திருப்பதியம் என்றே பெயர் பெற்ற
  மூவர் பாடல்கள் சாதாரண மக்களின் இந்த அளிய பக்தர்களின் வழக்குமொழியால் அவர்கள்
  நாவினிக்க தேவாரம் என்று அழைக்கப்பட்டு வருகிறது. ம்க்களுக்காக அவர்தம்
  முன்னேற்றத்துக்காக பாடப்பட்ட பாடல்கள் அவர்கள் விரும்பும் விதத்திலேயே
  அழைக்கப்பட்டது என்றுதான் சொல்லவேண்டும்.

  தேவாரம் பாடியதால் மாண்ட உயிர் மீண்டதுண்டு. தேவாரம் பாடியதால் பசித்த வயிறு
  புசித்ததுண்டு. தேவாரம் பாடியதால் வாடிய பயிர்கள் செழித்ததுண்டு. தேவாரம்
  பாடியதால் உள்ளத்தில் களங்கமெல்லாம் போய் சிவன் குடிகொள்ளும் கோயிலாய்
  மாறியதுண்டு. தேவாரத்தால் மானுடன் செழிக்கும். தேவாரத்தால் மனிதன் மேல்நிலை
  பெறுவான்.தேவாரம் மெய்ப் பொருள் காட்டும், தேவாரம் தெய்வத் தமிழால் தேவாரம்
  பாடி தீஞ்சுவை தேனை உண்டு தெய்வ அருளையும் பெறுவோமாக.

  ஏற்கனவே சொன்னது போல தேவாரம் என்பது தெய்வத்துக்கு நாம் அணிவிக்கும் மாலையாக
  மாறிய வரலாற்றை இங்கே சிங்கை மாநகரிலே தெய்வ சித்தத்தால் அடியேன் சொன்னது
  அனைத்தும் சிவன் அவன் சிந்தையில் நின்றதால் பெற்ற அவனருளாக பாவித்து உங்கள்
  அனைவரிடமும் இருந்து விடை பெறுகிறேன்.

  எனக்கு இதைப் பெருமையை அளித்த சிங்கை நண்பர் திரு குமார், கவிஞர்
  அ.கி.வரதாராஜன், திருமுறை மாநாட்டுத் தலைவர் டாக்டர் திரு கருணாநிதி
  அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

  நமசிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க!!

  தென்னாடுடைய சிவனே போற்றி! என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி!!

Howdy, Stranger!

It looks like you're new here. If you want to get involved, click one of these buttons!

Top Posters