தேவன் நூறு (தேவன் ஒரு சகாப்தம்)
 • *தேவன் ஒரு சகாப்தம்*
  *
  *
  (திவாகர்)  தேவன் எனும் மகாதேவன் எனும் அரிய பெரிய எழுத்தாளரைப் பற்றி நம் காலத்துப்
  பெரியவர்கள் அனைவருமே நன்றாகவே அறிந்திருந்தாலும், இந்தக் கால இளைஞர்களுக்கும்
  வருங்காலத்துக்கும் நம்மால் இயன்ற அளவு அவர் பெருமை சொல்லலாமே என்றுதான்
  இக்கட்டுரைத் தொடரைத் தொடங்க முன்வந்துள்ளேன்.  இந்த வருடம் தேவனின் நூற்றாண்டு வருடம்.. ஆம்.. சென்ற 1913 ஆம் ஆண்டில்தான்
  செப்டம்பர் மாதம் 8ஆந்தேதிதான் தமிழுலகத்தின் இந்தச செல்லக் குழந்தை
  திருவிடைமருதூரில் அவதரித்தது. தான் பிறந்த இந்தத் திருவிடைமருதூரை முடிந்த
  போதெல்லாம் தம் கதைகளில் கொண்டுவந்து விடுவார். பிறந்த ஊரின் மீது அத்தனை
  பற்று வைத்திருக்கும் தேவனைப் பற்றி எழுதும்போது தேவன் படைப்புகளைக்
  கொண்டுதான் இக்கட்டுரை அமையவேண்டுமென்பது என் விருப்பமாதலால் அவரது தனிப்பட்ட
  வாழ்க்கை, அவர் குடும்பம் போன்றவைகளைப் பற்றியோ, அவர் எப்படியெல்லாம்
  வாழ்ந்தார் என்பதைப் பற்றியோ இங்கு எழுதப்போவதில்லை என்பதை முன்னமேயே சொல்லி
  விடுகிறேன்.  தேவனைப் பற்றி எழுத எனக்குக் காரணம் இருக்கிறது. நான் பிறந்தவுடன் அவர்
  மறைந்தார் என்ற ஒரு காரணத்தை நகைச்சுவைக்காக சொன்னாலும், என் எழுத்துக்கு
  ஆத்தி சூடி அவர் படைப்புகளிடமிருந்துதான் பெற்றேன் என்பதை மட்டும் மிகப்
  பெருமையோடு சொல்லிக் கொள்கிறேன். ஒரு கதை எப்படி எழுதப்படவேண்டுமென்பதோடு
  வாசகன் பார்வையில் அது எப்படிப் படவேண்டுமென்பதிலும் தேவன் மிகக் கவனமாகக்
  கையாண்டிருக்கிறார். 1930 களின் ஆரம்பத்திலிருந்து 1957 வரை (ஏறத்தாழ
  இருபத்தைந்து வருடங்கள்) எழுதிக்கொண்டே இருந்த அந்த கை அவ்வப்போது ஏற்பட்டுக்
  கொண்டிருக்கும் அந்த இடைக் கால மாற்றங்களையும் தனக்குத் தோதாக எடுத்துக் கொண்ட
  விதமும், அவைகளை தம் எழுத்தில் பிரதிபலித்த விதமும் மிகவும் பாராட்டத் தக்கது
  என்றே சொல்லவேண்டும். இந்தக் கால கட்டத்தின் ஆரம்பத்தில்தான் இந்திய
  சுதந்திரப் போராட்டம் மிகத் தீவிரப்பட்டது. இந்தக் காலக் கட்டத்தின்
  மத்தியில்தான் உலகத்தின் மிகக் கொடிய அழிவுக்குக் காரணமான மோசமான உலகப்போர்
  நிகழ்த்தப்பட்டது. இந்தக் கால கட்டத்தில்தான் இந்தியா சுதந்திரமும் அடைந்து
  தன் மக்களின் பிரதிநிதிகளினால் தன் சுய ஆட்சியையும் ஆளப் பெறத் தொடங்கியதும்
  கூட.. இந்த கால கட்டத்தில்தான் அரசியலில் அவ்வளவாக மாசு படியாத சூழ்நிலை
  இருந்தாலும் சமூகம் மிகவும் மாசுபடிந்து முன்னேறமுடியாத நிலையில் அல்லலுற்று
  ஏழ்மை நிலையில் நோய்கள் மலிந்து கிடந்து, தேசத்தின் நாலா பகுதிகளும் ஒரு
  சோம்பலுற்ற நிலையில்தான் இருந்தது என்பதையும் மறக்கக் கூடாதுதான். பாரத
  மொழிகள் கூட முன்னேறமுடியாத, செழுமை அடைய முடியாத நிலையில் இருந்த கால கட்டம்
  கூட இதுதான். அதுவும் நம் மனதுக்கினிய தேனினும் இனிய தமிழ் மொழியைக் கட்டிக்
  காத்து வளர்த்து வந்தவர்கள் ஆதீனங்களைச் சேர்ந்த மடாதிபதிகளும், நன்னெஞ்சம்
  கொண்ட ஒரு சில செல்வந்தர்களே என்பதும் நாம் மறக்கக் கூடாது. தமிழ்த்தாத்தா
  உ.வே.சாமிநாதைய்யரும், மகாகவி பாரதியும் வீறு கொண்டு எழுந்து தமிழால் நாம்
  பெருமை பெறுகிறோம் என்று பல்வேறு காரணங்களை எடுத்துச் சொன்னதால் ஏனைய மொழிகளை
  விட தமிழ் இந்த அகண்ட பாரத தேசத்திலே பெருமையோடு இருந்தது என்று வேண்டுமானால்
  ஓரளவு சொல்லிக் கொள்ளலாம். அவ்வளவுதான்.. ஏனெனில் படித்த பெருமக்களிடையே
  ஆங்கில மோகம் தலைவிரித்தாடிய காலம். ஆங்கில எழுத்துக்கள், ஆங்கில நாவல்கள்,
  ஆங்கிலக் கவிதைகள், ஆங்கில நாடகங்கள் (ஷேக்ஸ்பியரின் நாடகங்களை அறிந்தவன்
  மட்டுமே அதிபுத்திசாலி) ஆங்கிலத் திரைப்படங்கள் எல்லாமே தமிழோடும் மற்ற
  மொழிகளோடும் ஒப்பு நோக்குகையில் தரத்தில் எங்கோ உச்சாணிக்கொம்பில்
  இருந்ததாகப் பட்டதால் படித்தவர்கள், படிக்கவிரும்பும் மாணவர்கள் எல்லோருமே
  தமிழுக்கு முக்கியத்துவம் தரவில்லை என்பதையும் நாம் ஒப்பு நோக்கவேண்டும்.
  தமிழுக்கு என்றல்ல எந்த மொழியின் நிலையும் அப்படித்தான் இருந்தது.  சரி, இந்த சரித்திரம் இப்போது எதற்கு எனக் கேட்டால், தேவன் கதைகளையும்
  கட்டுரைகளையும் வரிசைக் கிரமமாகப் படித்துக் கொண்டே வந்தால் இத்தனை
  சரித்திரங்களையும் ஆங்காங்கே நமக்கு அவரின் படைப்புகள் மூலம் விளக்கி
  வந்திருப்பதைக் காணலாம். ஆரம்பகால படைப்புகளில் அரசியல் நிகழ்வுகள் அதிகம்
  கலந்திருந்தாலும் போகப் போக சமூக நல்லமைப்பிலே நாட்டம் கொண்டு அந்த
  சமூகத்துக்குத் தம் எழுத்துகள் மூலம் நல்லவை செய்யவேண்டுமென்கிற தூய எண்ணத்தை
  அவரது தொடர்கதைகளாகட்டும், கட்டுரைகளாகட்டும் தெள்ளிய குளத்து நீரில் தெரியும்
  தரைமண் போல தெள்ளத் தெளிவாகத் தெரிவிக்கும். இப்படி நிகழ்கால சரித்திர
  நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து கதை மூலமாகவோ கட்டுரை மூலமாகவோ எப்படியாவது பாங்காக
  நுழைத்துத் தெரிவிப்பது என்பது தேவனுக்கு கை வந்த கலை. ஆங்கில மோகத்தால்
  ஆங்கிலப் புத்தகங்கள் புதினங்கள் என்று பேசிக்கொண்டிருந்தவர்களை, படித்துக்
  கொண்டிருந்தவர்களையெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக தமிழின் பக்கம் தள்ளிக்கொண்டு
  வந்த பெருமை தேவனுக்கும் தேவனின் எழுத்துக்கும் நிச்சயமாக உண்டு.  தேவன் ஆனந்த விகடனுக்கு உதவி ஆசிரியராக வந்து சேர்ந்தது கல்கியால்தான்
  என்றாலும் ‘மாஸ்டர் ராஜாமணி’ தான் கல்கிக்கு தேவனை அறிமுகப்படுத்திய
  ’உயர்ந்த’ மனிதன்.
  இந்த மாஸ்டர் ராஜாமணி சின்னப் பையன், வால் பையன், தேவனின் கட்டுரையின் ஒரு
  பாத்திரம்.. ஆனால் இந்த வால் பையனின் லூட்டியும், திறமையும்தான் கல்கியைக்
  கட்டிப் போட்டதோடு மட்டுமல்லாமல், அப்போது ஒரு நாள் எதேச்சையாகவும்
  சாதாரணமாகவும் ஆனந்தவிகடன் அலுவலகத்தில் ‘இந்த கல்கி என்பவர் எப்படி இருப்பாரோ
  என்று (வேவு) பார்க்க வந்த தேவனை இசகு பிசகாக ஒரு கேள்வி கேட்க வைத்தது.. ’அது
  சரி, இந்தக் கட்டுரையை நீதான் எழுதினாயோ’ என கல்கி கேட்க இவருக்கு ரோஷம்
  பொத்துக் கொண்டு வர, கல்கி தனக்கே உரிய பாணியில் சமாதானப்படுத்தி தேவனை
  விகடனிலேயே உதவி ஆசிரியராக நியமிக்க, அந்த 1930 ஆம் வருடங்கள் ஆனந்த
  விகடனுக்கே வசந்த காலமாகவும் பொற்காலமாகவும் ஆரம்பித்தன என்றே சொல்லலாம்.
  கல்கியின் உயர்ந்த குணங்களில் ஒன்று எங்கே நல்லது தெரிந்தாலும் மனமாறப்
  பாராட்டுவதும், தன் சக எழுத்தாளர்களையும் கை தூக்கி விடுவதும். அந்த உயர்ந்த
  குணம் கொண்ட கல்கியின் வலது கரமாகவே ஆகிப்போனவர்தான் தேவன் (கல்கி
  ஆனந்தவிகடனில் இருக்கும் வரை).  *தொ.மு.பாஸ்கரத் தொண்டைமான் ஒரு கட்டுரையில் தேவன் உதவி ஆசிரியராய்ச் சேர்ந்த
  வரலாற்றை இப்படி விவரிக்கிறார்.**

  **“ **அவர் முதல் முதல் எழுதிய மாஸ்டர் ராஜாமணியை**, **ஆம்**, **அந்தக்
  குஞ்சுப் பயல் ராஜாமணியை அழைத்துக் கொண்டு**, **தான் வேலை பார்க்கும்
  துரைமகனிடம் சென்ற அவனது மாமா**, **அங்கு அந்த ராஜாமணி குறும்பாகப் பேசிய மழலை
  மொழிகளை எல்லாம்**, **தமிழே அறியாத துரையிடம் மொழி பெயர்க்கும் விதத்தைப்
  படித்துப் படித்து இருபத்தைந்து வருஷங்களுக்கு முன்**, **நான் சிரித்ததை
  எல்லாம்**, **சொன்னபோது அவர் சொன்னார். **“**ஆம்**, **அந்த மாஸ்டர் ராஜாமணி
  தான்**, **சார்**, **எனக்கு ஆனந்த விகடனில் வேலை தேடிக் கொடுத்தான். அவன் தான்
  என்னை ஆசிரியர் **‘**கல்கி**’**யிடமும் திரு வாசனிடமும் அறிமுகம் செய்து
  வைத்தான்**” **என்றார். மேலும் சொன்னார். **“**அந்தக் கட்டுரையைப் படித்த **‘**
  கல்கி**’**க்கு ஒரு சந்தேகம். அது என் சொந்தச் சரக்குத் தானா என்று. ஆதலால்
  அதைத் தொடர்ந்து ஒரு கட்டுரையை**, **அங்கே அவர் பக்கத்தில் கிடந்த மேஜை
  அருகிலேயே உட்கார்ந்து அப்பொழுதே எழுதும்படிச் சொன்னார். எழுதிக் கொடுத்தேன்.
  அதன் பிறகே என்னை ஒரு உதவி ஆசிரியனாக அமர்த்தினார் **“ **என்றார்.** **(நன்றி:
  திரு பசுபதி **–** தேவன் நினைவுகள்-2 (**http://s-pasupathy.blogspot.ca/**
  2010/08/2**_**30.**html**)***  சரி, நான் ஏற்கனவே சொல்லிவிட்டேன், தேவனின் வாழ்க்கை வரலாற்றுக்கு நான்
  போகப்போவதில்லை.. ஆனாலும் இதோ நம் தேவன் ஆனந்த விகடனில் எழுத்துப் பணியைத்
  தொடங்க ஆரம்பித்தாயிற்று. ஒரு சொல், ஒரு வில், ஒரு இல் என்கிற இராமபிரானைப்
  போல அந்த ஒரே ஆனந்தவிகடனில் தான் சாகும் வரை இருந்து கொண்டு அவர் படைத்த
  படைப்புகளின் மூலமே அவரைப் பார்க்க ஆரம்பிக்கலாமா?


  (தொடர்வோம்)
 • *தேவன் நூறு -. தேவன் ஒரு சகாப்தம் - 3.*

  கதாநாயகன் முதன்முதலில் நூலகத்தில் கதாநாயகியைப் பார்க்கிறான் என்று சொன்னேன்
  இல்லையா.. இந்த லைப்ரேரியன் (நூலகர் என்றெல்லாம் தேவன் எழுதமாட்டார்) பற்றி
  முதல் பக்கத்திலேயே விமர்சிப்பார் பாருங்களேன்.. இவரைப் போல நிறைய ஆசாமிகளை
  நாம் வாழ்க்கையில் சந்தித்து வருகிறோம் என்றே நமக்குத் தோன்றும்.

  *“கலாசாலை லைப்ரரியின் ஜன்னலைத் திறந்த லைப்ரேரியன் கோவிந்தராவின் பசிக்களை
  மிகுந்த முகத்தில் அனல்காற்று வீசியது. அதன் சிடுசிடுப்பு இன்னும் சற்று
  முதிர்ந்தது. எதிரே மலைப்பாம்பு போல் வளைந்து கிடந்த ரஸ்தாவில், ஜலம் அசைவது
  போன்ற பொய்த்தோற்றந்தான் தென்பட்டது.” ஒன்றரை மணிமுதல் இரண்டேகால் மணிவரை
  லைப்ரேரியன் சிற்றுண்டி வேளை.”*

  மேலும் அவரைப் பற்றி நமக்கு சுவை கூடச் சொல்கிறார். இந்தப் பசிவேளையில்
  லைப்ரரியில்

  *”எதைக் கேட்டாலும் இல்லைதான் அப்போது, யார் கேட்டாலும் கிடையாதுதான்.. பீரங்கி
  வாயிலே வெளிப்படும் குண்டின் உத்வேகம் இங்கே வெட்கிப் போகும்”*

  இப்படித்தான் கதையை ஆரம்பிக்கிறார் தேவன். இப்போதே இந்த லைப்ரேரியன் பற்றி
  சற்று தெரிந்திருக்கும்.. இப்படிப்பட்ட மகோன்னத வேளையில் நம் கதாநாயகி வரவு
  அங்கே நிகழ்கிறது.

  *”ஸார் ப்ளீஸ்! “ என்றது இனிமை ததும்பிய குரல். அவள்தான் பேசினாள்.*

  *இருண்ட வானத்தில் பளிச்சிட்ட கொடி மின்னல் போல ஒரு புன்சிரிப்பை வருவித்துக்
  கொண்டு “என்ன?” என்றார் ராவ்ஜி. இந்த மகதாச்சரியத்தைக் காணும் பதம் பெற்ற
  ஆத்மா வேறொன்றும் இருந்தது.”*

  அந்த மாபெரும் ஆச்சரியத்தைக் கண்டவன் நம் கதாநாயகனே.. அதே போல நடராஜன் மணியை
  தேவன் வர்ணிக்கும்போது

  *குரங்கு பேன் பார்த்தாலும் பார்க்கும்,காதை அறுத்தாலும் அறுக்கும்’ என்கிறபடி
  மணி உதவி செய்கிறேன் என்றால் தாஸானுதாஸனாக இருப்பான். ஆளைக் கவிழ்ப்பதென்று
  சங்கல்பம் செய்துகொண்டால் மண்ணைப் போட்டு மூடிவிட்டுத்தான் உட்காருவான்.*

  அதே போல நடராஜன் ஜானகியோடு ரயில் பிரயாணம் செய்யும்போதும் தேவன் நமக்கு
  எப்படித் தெரிவிக்கிறார் பாருங்கள்.

  *(ரயில் பெட்டியில் நடராஜன்) ”உள்ளே நுழைந்ததும் ஆண் சிங்கம் பிடரியைச்
  சிலிர்த்துத் தலையைத் தூக்கிப் பார்ப்பது போல இருபக்கமும் பார்த்தான். பிறகு
  ஜானகி இருக்கும் திக்கை நோக்கி நடந்தான். ‘திக்திக்’ என்று அடித்துக் கொண்டது
  ஜானகியின் நெஞ்சம். மங்களம் அவனை வேல் விழிகள் கொண்டு கண்ணகி தேவியானவள்
  பாண்டியனை விழித்தது போல குரோதமாகப் பார்த்தாள்.”*

  இப்படி உவமையாகச் சொல்லிக் கொண்டு வருவதில் ஒரு சௌகரியம் வாசகர்களுக்குக்
  கிட்டி விடுகிறது. இந்தப் பாத்திரம் இப்படிப்பட்டது என்பதையும் வாசகர் மனம்
  உடனடியாக ஏற்றுக்கொண்டு விடுகிறது. வாசகர்களும் எங்கெல்லாம் அந்தப் பாத்திரம்
  வருகிறதோ அதற்கேற்றாற்போல தங்கள் மனநிலையை வைத்துக் கொண்டு படிக்கிற
  சௌகரியமும் ஏற்படுகிறது.

  இன்னும் சில ‘தேவ’ உவமைகளை மட்டும் தருகிறேன்.

  *****

  *கஷ்டப்படும் ஆத்மா கஷ்டப்பட்டே தீரவேண்டும் என்ற நியதியின்படி மங்களம்
  இல்லாதபோதும் கூட விச்ராந்தியாயிருக்க முடியாமல் இவர் பிடியில் திணறினான்.
  (ஜகதீசன்)*

  ********

  *வந்து சேர்ந்த நடராஜனுடைய ஆனந்தமும் திருப்தியும் முன்பு ராஜசூய யாகத்தை
  முடித்த யுதிர்ஷ்ட்ரனுக்கும் அச்வமேத யாதத்தை நடத்திய ராகவனுக்கும்
  ஏற்பட்டிருக்குமா என்பது சந்தேகமே*

  ********

  *பொட்டை வெளியில் எரிக்கும் வெய்யிலில் நான்கு சொட்டு மழைத்துளிகள் போல் வந்த
  அந்த வார்த்தைகளை ஏற்றுக்கொண்டு வெளியே வந்தான் (நடராஜன்).*

  ********

  *துஷ்டனைக் கண்டால் தூர விலகுகிறதும், அது பயப்படுகிறது என்று துஷ்டன்
  எண்ணிக்கொண்டு கொக்கரிக்கிறதும் வழக்கமாக நடப்பதுதானே காலேஜில் நடராஜன் ஒரு
  காலத்திலும் சந்துருவை நெருங்கினவன் இல்லை.*

  ********

  *பல்வரிசை காட்டிக் கைகொட்டி ஆர்ப்பரிப்பது போல சமுத்திர அலைகள் ஓயாது
  எழும்புவதும் குனிவதுமாக இருந்தன (திருச்செந்தூர்).*

  ********

  *பகலிலேயே இருள் கவிந்திருக்கும் சுப்புரத்தினத்தின் கிருஹம் **இரவில் துஷ்ட
  மிருகத்தின் குகை போல காணப்பட்டது.(சந்துருவின் வீடு)*

  ********

  *சூரியன் மாயவரம் வள்ளலார் கோயில் வீதியில் தினம் தினம் உதயமாகும்போது
  முதல்முதலாகப் பட்டுபுடவையை மடிசார் வைத்துக் கட்டிக்கொண்டு முன் வாசலில்
  அழகாக மாக்கோலம் போடும் ஒரு பெண்மணியைத்தான் பார்ப்பது வழக்கம். பார்த்தவுடன்
  உள்ளம் பூரித்துத் தன் கதிர்களைத் தெருவெல்லாம் வாரி இறைப்பான். அந்தப்
  பெண்ணும் அவனைப் பார்த்துப் பல்வரிசையைக் காட்டிவிட்டு, தன் வேலையில் முனைவாள்
  (இது மணியின் மனைவியைப் பற்றி உவமையோடு ஒரு அறிமுகம்)*

  ***********

  *பெரிய சோம்பேறி; நாட்டுப்புறத்துப் பெருச்சாளி’ என்கிற நினைப்புடன் ஹரன்
  அவரைப் பார்த்தார். அவர் ஹரனை, ‘ஒன்றுக்கும் உதவாத உதியமரம், டெல்லியில்
  வளர்ந்ததனால் விறைக்கிறது’ என்ற பாவத்தில் பார்த்தார். (மணியின் தந்தை
  வீட்டில் நடராஜனின் தந்தை)*

  *********

  *தன் தலைக்கு மேல் முழங்கும் பேரிடிகளைப் பற்றிக் கலங்கியவாறு வரும்போது
  இடிகளுக்கிடையே
  தோன்றிய பாதை மீது ஒளி வீசி வழி காட்டும் மின்வெட்டுகளைப் போன்றதொரு
  சந்தர்ப்பமும் அவனுக்கு ஏற்பட்டது.*

  *********

  *சிவாக்ஞையின் பேரிலே ஆவிர்ப்பவித்த அக்கினி வீரபத்திரமூர்த்தியும்,
  துஷ்டநிக்கிரகத்துக்காகத் தூணைப் பிளந்துகொண்டு வெளிப்பட்ட நரஸிம்ம ஸ்வாமியும்
  அப்போது அவருக்கு நிகராக முடியாது (ஹரனின் கோபம் பற்றி நடராஜன் நினைப்பது).*

  *********

  *சுக்குக் கஷாயத்தில் விடப்பட்ட விளக்கெண்ணையை விடியற்கால வேளையில் சிறுவர்கள்
  நோக்கும் அருவருப்புடன் ஜகம் கிழவரைப் பார்த்தாள்.*

  இந்த சுக்குக் கஷாய அனுபவம் சிறிய வயதில் எனக்கும் கூட ஏற்பட்டது உண்டு. ஊரிலே
  தாத்தாவின் இந்த சுகாதார ஏற்பாடு இப்போது நினைத்தாலும் ‘வயிற்றைக் கலக்கும்”.

  ’மிஸ் ஜானகியின்’ கதை எல்லோருக்கும் பிடிக்கும் கதை. மிகப் பெரிய
  திருப்பங்களோ, சோகமயமோ, அந்தக் கால படங்களில் வருவது போல வண்டி வண்டியாக
  வசனங்களோ இல்லாத கதை. இத்தனைக்கும் இது எட்டு/பத்து நாட்களில் நடக்கும்
  நிகழ்ச்சிகளை வைத்து விவரிக்கப் பட்டிருக்கும் கதைதான் என்பதால்
  விறுவிறுப்பாக போய்க்கொண்டே இருக்கும். ஆனால் இந்த எட்டு நாட்கள் கதையிலும்
  ஒரு சில பாத்திரங்களுக்கு ஆயுள் பூராவுமாக நடக்கிற சங்கதிகளை மிகச்
  சுருக்கமாகச் சொல்லி விடுவது என்பது தேவனுக்கு கை வந்த கலை. அதுவும்
  திருச்செந்தூரிலேயே கதை முக்கால்வாசி நடப்பதால், அங்கே அருளாட்சி புரியும்
  எந்தை முருகனைப் பற்றிய வர்ணனைகளை சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் அள்ளி
  வழங்குவதில் தேவனுக்கு இணை தேவனேதான்.

  தேவன் இந்த ‘ஃப்ளாஷ்பேக்’ என்று சொல்லப்படும் உத்திகளை மிக நயமாக இந்தக்
  கதையில் கையாண்டுள்ளார். சினிமாவில் இப்படி காண்பிப்பது மிகச் சுலபம்.
  எழுத்தில் எப்படி காண்பிப்பது. தேவனின் கதைகளைப் படித்தால் அதன் லாவகம்
  தெரிந்து விடும்.

  இந்த மிஸ் ஜானகியில் ஒரு நாயும் வரும். டைகர் என்ற பெயருடன் திருச்செந்தூர்
  கீழப்புதுத்தெருவில் ‘அநியாயமாக’ யாரையும் நுழையவிடாமல் அழிச்சாட்டியம்
  பண்ணும். நாயை மிக விசேஷமாக வர்ணனை செய்வார் தேவன். நாட்டிய மணி தெலுங்கு
  பங்காருவின் வீட்டில் பாதுகாப்புக்காக அவர் தந்தையால் வளர்க்கப்படும் டைகரின்
  பாவனைகளுக்கும் அதன் ‘உர்..உர்.. பாஷைகளுக்கு தேவன் விளக்கம் சொல்லும் அழகே
  அழகே.. *(டைகர் என்ற பெயரை வைத்துக்கொண்டு பூனை போல இருக்கும் சுபாவம்
  அதனுடையதல்ல, கூடவே அன்று சிறிது விச்ராந்தியாக அவிழ்த்துவிடப்பட்டிருந்ததால்
  கீழப்புதுத்தெருவின் ஒரு கோடிமுதல் மற்றொரு கோடி வரை வாக்கிங் செய்துவிட்டு
  ஒரு முனையில் நின்று இந்த உலகத்தில் நாய் இனத்துக்கு இழைக்கப்பட்டுள்ள
  அநீதிகளைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருந்தது)*

  இப்படிப்பட்ட டைகரின் ஒரு ருசிகரமான விளையாட்டை மட்டும் தேவன் எழுத்துக்களால்
  படித்து விட்டு நாம் மிஸ் ஜானகியை விட்டு விலகி கல்யாணியை சந்திப்போமாக.


  (தொடர்ந்து வரும்)
 • Dear Sri Diwakar,
  Thank you very much for the article. I am also a fan of Devan. More so I
  also belong to Thiruvidaimaruthur.
  withwarm greetings,
  Bala TV
 • *தேவன் நூறு - தேவன் ஒரு சகாப்தம் - 7*

  திவாகர்

  http://www.vallamai.com/paragraphs/32547/

  *”ஏ பைத்தியக்கார மனிதனே! நீ பிறரைப் பற்றி எவ்வளவு தவறாக நினைக்கிறாய்? நீ
  ஒருவன்தான் கவலையுள்ளவன் போலவும்,பொறுப்பு உள்ளவன் போலவும் எண்ணி, பிறர்
  நிச்சிந்தையாக இருப்பதாக முடிவு செய்கிறாய்.! என்ன ஏமாற்றம் அது.! சிலசமயம்
  நான்ஒருவனே மேதாவி என்று இறுமாப்புக் கொள்கிறாய்! என்ன முட்டாள்தனம். ஒரு
  சமயம் நம் சகதியே சக்தி என்று மெச்சிக் கொள்கிறாய்! என்ன அசட்டுத் தனம்’ ”*

  *மிஸ்டர் வேதாந்தம்* நடந்துகொண்டேயிருக்கும்போது இப்படித்தான் மனிதர்களைப்
  பற்றி வேதாந்தமாகப் பேசுவதாக தேவன் எழுதி வைப்பார். ’மிஸ்டர் வேதாந்தம்’
  புத்தகத்தைப் படித்தவர்களைக் கேட்டால் இப்படி ஒரு அருமையான கதாபாத்திரத்தைத்
  தேவன் ஒருவரால்தான் படைத்திருக்கமுடியும் என்பார்கள். ஆஹா ஓஹோ என்றெல்லாம்
  இல்லாமல் எளிமையான வாழ்க்கைத் தத்துவத்தை மிஸ்டர் வேதாந்தம் என்கிற
  பாத்திரத்தின் மூலமாக தேவன் தந்திருப்பதே இதற்கு காரணம். வாழ்க்கையில் சுகமும்
  துக்கமும் ஒரே நாணயத்தின் இருபக்கங்கள் என்பதை முதலிலிருந்து கடைசி வரை
  வேதாந்தம் மூலம் நாம் பார்க்கலாம்.

  சுகஜீவியாக கல்லூரி படிப்பு வரை வாழ்ந்தவன் வேதாந்தம். இவனைப் பற்றிய
  ஆரம்பகாலக் கட்டங்களை தேவனின் எழுத்துகள் மூலமாக கீழே கொடுக்கப்பட்டிருக்கிறது.

  தூத்துக்குடி தேசிகாச்சாரி எனபவர் ஏழைகளான பெற்றோருக்கு மூன்றாவது பிள்ளையாகப்
  பிறந்தாலும்கூட,அவரது வலது உள்ளங்கையின் மத்திய பாகத்தில் செங்குத்தாக ஒரு
  நீண்ட கோடு ஓடியது. ரேகை சாஸ்திரப் புத்தகங்களில் இது தனப்ராப்தியைக்
  குறிப்பதாகும் என்று போட்டிருக்கும்.அதையொட்டித்தானோ என்னவோ, அதே ஊரில்
  மிராசுதாராக இருந்த சக்கரபாணி அய்யங்காருக்குப் புத்திர சந்தானம் ஏறபடவில்லை.
  தேசிகாச்சாரியின் களை மிகுந்த முகமும் அவரை வசீகரித்தது.. இரண்டாம்
  பேரைக்கலந்து கொள்ளாமலே அந்தப்பிள்ளையை ஸ்வீகாரம் செயதுகொண்டு விட்டார்.

  நமது கதாநாயகனாகிய வேதாந்தத்தின் சாக்ஷாத் தகப்பனார்தான் இந்தத்
  தேசிகாச்சாரியார். தூத்துக்குடி கிராமத்தில் மாடிவீட்டில் உடகார்ந்துகொண்டு
  தம் ஏக புதல்வனாகிய வேதாந்தத்தை மாயவரம் ஹைஸ்கூலுக்கு அனுப்பி வைத்தார்.

  தேசிகாச்சாரி படித்தவர் இல்லை.தாமாகச் சம்பாதித்தவரும் இல்லை.’’ பூர்வ ஜன்ம
  க்ருதம்’’ என்று சொலவார்களே, அந்த நியாயத்தின்படி அவரிடம் தனம் வந்து
  சேர்ந்தது. அதைத் தன் பிள்ளைக்கு தாராளமாகச் செலவழித்தார்.

  பையன் பள்ளிக்கூடம் போகிறான் என்றால் , அது சாமான்யமான விஷயமாக
  கருதப்படவில்லை. மாயவரத்தில் தேசிகாச்சாரியின் பிள்ளையைத் தெரியாதபேர்
  கிடையாது. அவன் ஹோட்டலில் ஹல்வா தின்றால், அவன்கூட இருபது சகாக்களாவது ஹல்வா
  தின்பார்கள். பிள்ளையாண்டானுக்கு வெற்றிலைபாக்கு ஒரு ரூபாயக்குக் குறைந்து
  வாங்கத் தெரியாது.வாங்கினால், அதை ஒரேநொடியில் மாயமாக மென்று துப்ப நணபர்கள்
  காத்திருந்தார்கள். மாயவரத்தில் புதிதாக நாடகம், சர்க்கஸ், கண்காட்சி என்று
  எது வந்தாலும் வேதாந்தம் முதல்வரிசையில் இருந்து கொண்டு ஒரு டஜன்
  பரிவாரங்களுடன் பார்ப்பான்.

  வேதாந்தத்தின் தகப்பனார் தேசிகாச்சாரி,பிள்ளை சம்பந்தப்பட்ட வரையில் கடுமையான
  பேர்வழியே இல்லை.அவன் கேட்டதை வாங்கிக் கொடுத்தார்.

  ஒருசில ஆப்தர்கள் தேசிகாச்சாரியிடம் , வேதாந்தம் இப்படி இருக்கிறானே,
  கவனியேன்’’ என்று சொல்லியிருக்கிறார்கள். ‘இருக்கட்டுமே..நம்ம பையன்தானே, அவன்
  பாஸ் செயது முன்னுக்கு வந்து தங்கமும் வெள்ளியுமாக வேண்டியது சம்பாதித்துக்
  கொள்கிறான்!’’ என்று பதில் சொல்லி அனுப்புவார். அவர் எங்கிருந்து வாரி
  வீசுகிறார், அவர் வரும்படி என்ன என்பது ஒரு பெரிய மர்மம் .வேதாந்தம்
  அதைப்பற்றிக் கேட்டதும் இல்லை. மனத்தை வருத்திக் கொண்டதும் இல்லை.

  டென்னிஸ் மட்டைகளில் நாலு வைத்திருந்தான். உயர்ந்த துணிகளில் தயாரிக்கப்பட்ட
  உடுப்புகள் மூன்று பெட்டிகள் இருந்தன. புரொபஸர் ஒரு புத்தகத்தின் பெயரைச்
  சொல்ல வேண்டியதுதான்.மறுநாள், என்ன விலையானாலும் லடசியம் செய்யாமல்
  வாங்கிவிடுவான்..

  இப்படிப்பட்ட பணக்கார வேதாந்தந்துக்கு விதி ரூபமாக வாழ்க்கை தடம் புரண்டது.
  அப்பா இஷ்டத்துக்கு வகை வழி இல்லாமல் செல்வத்தைச் செலவு செய்ததும் அல்லாமல்
  கடனும் நிறைய வாங்க ஆரம்பித்து செல்வந்தனாகவே மறைவது என்று கங்கணம்
  கட்டிக்கொண்டு செத்துப்போனதும்தான் வேதாந்தத்துக்குத் தன் உண்மை நிலை புரிய
  ஆரம்பித்தது. பணம் இருக்கும் வரை, இனிப்பைச் சுற்றி பறக்கும் ஈக்கள் போல
  இருந்த உற்றார் உறவினர் கல்லூரிப் படிப்பின் கடைசி கால கட்டத்தில் அவனை விட்டு
  நீங்கியதோடு மட்டுமல்லாமல் மீதி இருந்த செல்வத்தையும் சூறையாடினர். அவனின்
  அந்தக் கஷ்டகாலத்தில் காப்பாற்றியது அவன் அத்தையும் அத்தை பெண்ணான செல்லமும்
  தான். அவர்கள் ஏழைதானென்றாலும் வேதாந்தத்தின் செல்லக் காதலியாக வளர்ந்தவள்
  செல்லம்.

  இனி அவன் பரிட்சையில் பெயில் ஆகி, சென்னை மாநகரம் வந்து அவதிப்பட்டு
  எழுத்துலகத்தில் போராடி தோல்வியுற்று பிறகு மெல்ல மெல்ல எப்படி வாழ்க்கையின்
  அதிர்ஷ்டத்தை எட்டிப் பார்க்கிறான் என்பதுதான் கதை.

  தேவன் இந்தக் கதையில் சொந்த அனுபவங்களை ஆங்காங்கே தூவினாரோ என்னவோ,
  பத்திரிக்கையுலகையும், எழுத்தாளர்கள் நிலையையும் துல்லியமாக வெளிப்படுத்துவார்
  தன் கதையில். வேதாந்தத்துக்கு உதவி புரியும் ஸ்வாமியும் சிங்கமும், அதே போல
  அவனுக்கு எதிரியாக அவனை வதம் செய்யும் வைரம் போன்ற பாத்திரங்களும் இன்னமும்
  இந்தக் கால கட்டத்திலும் எங்காவது இருந்துகொண்டே இருக்கின்றனர் என்றுதான்
  நினைக்கத் தோன்றும். கள்ளமும், சூதும், கபடமும் நிறைந்த வாழ்க்கையில் எல்லாத்
  துறைகளிலுமே அதன் பிரதிபாவம் இருக்கின்றதை படிப்பவர்கள் புரிந்து கொள்ளலாம்.

  மூத்த எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி எழுதுகையில், தேவனின் கதாபாத்திரங்கள்
  உருவாகியவுடன் அனுபவங்களின் ஊடே படிப்படியாக மெருகு பெற்று நேர்த்தியான
  முறையில் நம் உள்ளத்தில் பதிகிறார்கள், அப்படிப்பட்ட வகையில் வேதாந்தத்தின்
  பாத்திரப்படைப்பு என்பது தேவனின் ‘மாஸ்டர்பீஸ்’ என்பார். இது உண்மைதானே.
  செல்வம் மறைந்தாலும் நற்குணம் மறையக் கூடாது. ஏழ்மை சூழ்ந்தாலும் சோம்பல்
  கூடாது, என்பதோடு முயற்சிகள் முதலில் ஏமாற்றத்தைத் தந்தாலும் வெற்றியின்
  படிக்கட்டை நம்மால் அடையமுடியும் என்ற நம்பிக்கை எப்போதும் வேண்டும் என்பதே
  வேதாந்தம் நமக்குத் தரும் பாடம்.

  தேவன் இந்தக் கதையில் இன்னொன்றையும் வாசகருக்குத் தெரிவிப்பார்.
  வேதாந்தந்துக்கு யார் யாரெல்லாம் துரோகம் செய்தார்களோ, யார் யாரெல்லாம்
  தீங்கிழைத்தார்களோ அவர்கள் எல்லோருமே வாழ்க்கையின் வெவ்வேறு கட்டத்தில் ஏதாவது
  ஒருவிதத்தில் கஷ்டப்பட்டு யாருக்கு தீங்கிழைத்தாரோ அந்த வேதாந்தத்திடமே உதவி
  கேட்டு வருவது. இது நிச்சயமாக ஒரு எழுத்தாளரின் சமூகப் பணியாகத்தான் எடுத்துக்
  கொள்ளவேண்டும். தீங்கிழைத்தவனாகட்டும், மோசம் செய்தவனாகட்டும் வருந்தியோ,
  தண்டனைப்பட்டோ ஆகவேண்டும் என்பதை சமூகத்துக்கு தெளியவைப்பதும் வாழ்க்கையில்
  அது ஒரு பாடமாக அமையவேண்டும் என்பதை வாசகர் மனதில் பதிப்பதும் சீரிய சமூகச்
  சேவைதானே.

  வேதாந்தத்தை போலத்தான் ஸ்ரீமான் சுதர்சனம் பாத்திரமும் நம் மனதில் பலமாக
  நிற்கக்கூடியதுதான். நிதர்சனங்களையும், தன்னை அழுத்தும் கட்டாயச்
  செலவினங்களையும் தாங்கமுடியாமல் ஒரு ஏழை குமாஸ்தா, அதுவும் தனியார்
  கம்பெனியில் பணிபுரியும் ஒரு சம்சாரி, நல்லவன், ஒவ்வொரு கட்டத்தில் திசை
  மாறுவதும், ஆனாலும் தகுந்த சமயத்தில் உண்மை உணர்ந்து திருந்துவதோடு
  மட்டுமல்லாமல் தான் செய்த குற்றங்களையும் தயக்கமில்லாமல் தன் முதலாளியிடமும்
  கடைசியில் தன் மனைவியிடமும் ஒப்புக் கொண்டு வருந்துவதும் ஒரு யதார்த்தமான
  முறையில் தேவன் நமக்குக் காண்பித்திருப்பார். சுதர்ஸனமும் அவன் மனைவி கோமளமும்
  தங்கள் தாய் தந்தையர்களை பட்டணத்துக்கு வரவழைத்து அவர்கள் மருத்துவத்துக்கு
  ஏற்பாடு செய்கையில் அவர்கள் படும் துன்பம், வலி எல்லாமே நகைச்சுவை போர்வையில்
  கொடுக்கப்பட்டிருந்ததால் சிரித்துக் கொண்டே வாசகனும் அவர்கள் வலியை உணரும்
  வாய்ப்பை அளிப்பார் தேவன்.

  அதே சமயத்தில் தேவன் வாழ்ந்த கால கட்டத்தில் இருந்த சமுதாயத்தில் முழுச்
  சூழலையும் இங்கே தெரிவித்திருப்பார். சுதந்திர இந்தியாவின் ஆரம்ப காலகட்டங்கள்
  மிக மிக ஏழ்மையானவை. பிரிட்டிஷ் அரசு அப்படித்தான் நம்மை விட்டுச் சென்றது
  என்பதுதான் உண்மை. சமூகம் நலிந்து கிடந்ததென்றால் அந்த சமூகத்தில் இருக்கும்
  மக்களின் சுயநலங்கள், பகை, மோசம் செய்தல், ஒருவனை ஒருவர் காட்டிக்கொடுத்து
  வாழுதல் போன்ற நீச குணங்கள் சமூகத்தில் ஏராளமாகவே வேரூன்றிக் கிடந்தாலும்,
  நல்லவர் என நால்வர் இருப்பதால் மட்டுமே இந்த சமூகம் வாழ்கின்றது என்ற எளிமையான
  தத்துவங்களையும் தேவன் கதை மூலம் அறியலாம்.

  சென்னையில் வசிக்கும் மத்திய தர வர்க்கத்தினரைப் பற்றி மகாகவி பாரதியார்
  ‘ஆறில் ஒரு பங்கு’ எனும் சிறுகதையில் “ஸ்ரீமான் நாயுடுவுக்கு மூன்று
  வருஷத்துக்கொரு முறை ஆபீஸில் பத்து ரூபாயும் வீட்டில் ஒரு குழந்தையும்
  பிரமோஷன்’ என்று நகைச்சுவை பொங்க மக்கள் பெருக்கத்தையும் பொதுஜனக்
  கஷ்டத்தையும் விவரிப்பார். பாரதியார் காலத்திய கஷ்ட நிலை நாம் சுதந்திரம்
  பெற்ற பின்னும் வெகு காலம் நீடித்தது என்றே சொல்லவேண்டும். அடிமைகள் போல
  கஷ்டப்பட்டு அரையணா கூலிக்காக வேலைசெய்து பிழைப்பவர்கள் அந்தக் கால கட்டத்தில்
  உண்டு.

  ஸ்ரீமான் சுதர்ஸனமும் சரி, லக்ஷ்மி கடாட்சம் கதையானாலும் சரி, சற்று
  துன்பமயமாக சாதாரணமாகத் தோன்றினாலும் உண்மையில் எளிய நகைச்சுவையின்
  அடிப்படையிலேயே துன்பத்தைக் காண்பித்திருப்பார் தேவன். இது தேவன் டெக்னிக்
  என்றுதான் சொல்லவேண்டும். பொதுவாக துன்பத்தை அனுபவிப்பதும், அதைப் பற்றி எழுத
  பேச நிறைய வாசகர்களுக்குப் பிடிக்காது. ஆனால் சொல்லும் பாணி நகைச்சுவையில்தான்
  இருப்பதால் கடகடவென படித்துவிடத்தான் தோன்றும். முதலில் சிரிப்பாக இருந்தாலும்
  அந்தப் பாத்திரம் எத்தனை துன்பப்படுகிறது என்பது புரியும். ஆனால் ஏற்கனவே
  சொன்னது போலவே அந்தந்த கால கட்டத்தின் பிரதிபலிப்பு அந்தக் கதைச் சம்பவங்களில்
  ஏராளமாகக் கிடைக்கும்.

  மறைந்த எழுத்தாளர் சுஜாதாவுக்கும் மிகவும் பிடித்ததாக ‘ஸ்ரீமான் சுதர்ஸனத்தை’
  சுட்டிக்காட்டுகிறார்.*”பொதுவாக, நகைச்சுவைக் கதைகளின் ஆயுள்காலம் மிகவும்
  சொற்பம். உலக அளவில் எடுத்துக் கொண்டால் கூட, இன்று வரை நீடித்து நிற்கும்
  நகைச்சுவைக் கதைகளின் பெயர்களை ஒரு உள்ளங்கையில் எழுதிவிடலாம். தேவனின்
  ஸ்ரீமான் சுதர்சனம் அந்தப் பட்டியலில் மிகச் சுலபமாக வரும்” (நன்றி –
  சுஜாதாவின் கற்றதும் பெற்றதும், பாகம் 1).*

  நகர வாழ்க்கை இன்னமும் பலம் பெறாத கால கட்டத்தில் கிராமத்தில் உள்ள
  குடும்பங்களும், நகர வாழ்க்கைக்காக இடம் பெயர்ந்த குடும்பங்களும் (முக்கியமாக
  ஏழைகள்) எப்படியெல்லாம் அந்தக் கால கட்டத்தில் வாழ்ந்திருக்கவேண்டும் என்ற
  நிதர்சனம் இந்தக் கால வாசகர்களுக்குக் கிடைக்கும்.

  இப்படி சமூகங்களைப் பற்றிய நிலவரங்களை நகைச்சுவையோடு தன் பாணியில் பிற்கால
  சமூகத்துக்குத் தந்த தேவன் ஒரு புதுமை நிறைந்த புதினத்தை தமிழுலகத்துக்குப்
  பரிசாகத் தந்தார். அதுதான் ஜஸ்டிஸ் ஜகன்னாதன்.

  (தொடர்ந்து வரும்)

Howdy, Stranger!

It looks like you're new here. If you want to get involved, click one of these buttons!

Top Posters