காயத்ரி மந்திரத்தின் பொருள் என்ன? தத்துவம் என்ன?:
  • ஸவித்ரு என்னும் சொல்லுக்குத் தூக்கத்திலிருந்து தட்டியெழுப்புபவன் என்னும்
    பொருள் உண்டு. சூரியன் உதயமாகிற வேளையில் ஸ்தாவர ஜங்கமங்களாக இருக்கின்ற
    உயிர்கள் அனைத்தும் உறக்கத்தினின்று விழித்தெழுந்திருப்பவைகள் ஆகின்றன.
    புலர்கின்ற பொழுதானது உயிர்கள் அனைத்துக்கும் பள்ளியெழுச்சியப் பண்ணி
    வைக்கிறது. நாள்தோறும் கண்கூடாக நாம் காணும் காட்சி இதுவேயாம். இதற்கு நிகரான
    அத்யாத்ம அமைப்பு இருக்கிறது. ஆத்ம சொரூபத்தை மனிதம் எப்பொழுதெல்லாம் ஞாபகப்
    படுத்திக் கொள்ளுகிறானோ அப்பொழுதெல்லாம் ஆத்மபோதத்தில் அவன் தட்டியெழுப்பப்
    படுபவனாகிறான். ஆத்மபோதம் அலல்து சொரூப உணர்ச்சி ஒருவனிடம் ஓங்குவதற்கு ஏற்ப
    சொரூப ஞானத்தில் அவன் எழுப்பப் பட்டவனாகிறான். சொரூப ஞான வளர்ச்சி அடைந்து
    வருபவன் இருபிறப்பாளன்.

    ஸவித்ரு என்னும் சொல்லுக்கு உயிரூட்டுபவன் என்னும் பொருள் உண்டு.
    சூரியவெளிச்சம் படாத உயிர்வகைகளெல்லாம் தத்தம் உயிர்த்தத்துவத்தில்
    கீழ்மையுறுகின்றன; செயலற்றுச் சவங்கள் போன்று கிடக்கின்றன. கதிரவனுடைய
    கதிர்களை ஏற்பதற்கு ஒப்ப அவைகளுக்குப் புத்துயிர் வருகிறது. இந்த
    அதிசயத்தையும் புறவுலகில் நாம் சர்வகாலமும் கண்டு வருகிறோம். ஜீவ அமைப்பில்
    எந்த ஜீவன் தன்னை உடல் சொரூபமாக உணர்கின்றானோ அவன் பிரகிருதி நிலையிலேயே
    உழல்கிறான். எந்த ஜீவனிடத்து ஆத்மபோதம் உதயமாகிறதோ அந்த ஜீவன் பாரமார்த்திகப்
    பெருநிலையில் வாழ்வைப் புதுப்பிக்கின்ற துவிஜன் ஆகிறான்.

    காட்சிக்கு எட்டாது மறைந்த நிலையில் இருக்கும் கதிரவனுக்கு ஸவித்ரு என்று
    பெயர். உதயமாகிக் காட்சிக்கு எட்டுகிற நிலையில் இருக்கிற கதிரவனுக்குச்
    சூரியன் என்று பெயர். ஆதலால் வானத்தில் இலங்கும் அந்த ஒரே தேவதைக்கு ஸவித்ரு
    என்ற பெயரும் வழங்கப் பெறுகிறது. கட்புலனாகாத நிலையில் அத்தேவதை
    ஸவித்ருவாகவும், கட்புலனாகின்ற நிலையில் சூரியனாகவும் அழைக்கப் பெறுகிறது. இது
    நடைமுறை. இதற்கொப்ப ஜீவாத்ம சொரூபத்தில் ஆத்ம சான்னித்தியம் அறியப்படாத
    நிலையில் அந்த ஜீவன் பசு என்றும் பிரகிருதி என்றும் இயம்பப் பெறுகின்றது. தான்
    ஆத்மசொரூபம் என்னும் பிரக்ஞை ஓங்கப் பெற்றுள்ள ஜீவாத்மன் புருஷன் என்று
    அழைக்கப் படுகிறான்.

    ஸவித்ரு என்னும் சொல் அகிலத்துக்கும் ஆதரவு என்று பொருள்படுகிறது.
    அசைந்துகொண்டும், மாறுபட்டுக் கொண்டும் இருக்கிற பொருள்களுக்கு அசையாததும்,
    மாறுபடாதும் இருக்கிற பொருள் ஆதரவு ஆகிறது. ஆக, எது ஆதரவோ அது அசைவதில்லை.
    புறவுலகில் தென்படுகிற சூரியன் உண்மையில் ஒரே இடத்தில் இருந்தபடியே
    இருக்கிறது. அது வானத்தில் சஞ்சரிப்பது போன்று நமக்குத் தோன்றுகிறது.
    சஞ்சரிக்காத வஸ்துவைச் சஞ்சரிக்கும் வஸ்து என்று பொருள்படுத்துவது நம்முடைய
    சிற்றறிவு. சூரியனைச் சார்ந்துள்ள கிரகங்களுக்கெல்லாம் அது ஆதரவாக இருக்கிறது.
    புறவுலகில் காண்கின்ற இக்கோட்பாடு அகவுலகிலும் அமைந்திருக்கிறது. பிரகிருதி
    சொரூபமாக இருக்கின்ற சரீரம், புறக் கரணங்கள், அகக் கரணங்கள் ஆகிய
    அனைத்துக்கும் ஆதரவாய் இருப்பது ஆத்ம சைதன்யம். இந்த ஆத்ம சைதன்யத்தை ஆதரவாக
    வைத்துக் கொண்டே ஜீவவியக்தி பலப்பல பாங்குகளில் வடிவெடுத்து வருகிறது என்பதை
    அறிபவனே துவிஜன்.

    ஸவித்ரு என்னும் சொல் பாபத்தினின்று விடுவிப்பவன் எனப் பொருள்படுகிறது.
    பாபமானது வினையின் ஒரு கூறு ஆகிறது. புண்ணியம் என்பது வினையின் மற்றொரு கூறு.
    கர்மத்தைப் புண்ணிய கர்மம் என்றும் பாபகர்மம் என்றும் பாகுபடுத்துகிறோம்.
    ஜீவாத்மனை உயர்நிலைக்கு எடுப்பது புண்ணியகர்மம், ஜீவாத்மனை மேலும் மேலும்
    கீழ்மையில் ஆழ்த்துவது பாபம். பொழுது படிந்ததும் உயிர்கள் உறங்கப் போகின்றன.
    சிற்றியல்பு படைத்தவர்கள் கொலை, களவு முதலிய பாபச் செயல்களில் ஈடுபடுகின்றனர்.
    சூரிய வெளிச்சத்தில் அத்தகைய செயல்களுக்கு அவகாசமில்லை. சூரியனுடைய
    சான்னித்தியம் எல்லா உயிர்களையும் மேலான கர்மங்களில் தூண்டுகிறது. ஆதலால்
    சூரியன் உயிர்களைப் பாபத்திலிரு்ந்து விடுவிப்பவன் எனப் போற்றப் படுகிறான்.
    மக்களுள் தங்களை உடல் சொரூபமாக உணர்பவர்களே புல்லிய வினைகளில் ஈடுபடுகின்றனர்.
    தங்களை ஆத்ம சொரூபமாக உணர்பவர்கள் சத்கர்மங்களைப் புரிந்து கர்ம
    அதீதத்துக்குப் போக முயல்கின்றனர். சத்கர்மங்களிலேயே ஈடுபடுகின்றவர்களும்,
    கர்ம அதீதத்திற்குப் போக முயலுகின்றவர்களும் துவிஜர்களாவர்.

    இங்ஙனம் காயத்ரியில் அமைந்துள்ள ஸவித்ரு என்னும் நாமம் புறவுலகிலுள்ள
    சூரியனுடைய மகிமையையும், அகவுலகிலுள்ள ஆத்ம சொரூபத்தின் மகிமையையும்
    விளக்குவதாக வந்துள்ளது.

    பர்க: (भर्ग:) என்பது பரம்பொருளைக் குறிக்கின்ற இரண்டாவது பெயர் ஆகிறது. பர்க:
    என்னும் பதம் திரண்ட சுயப்பிரகாசம் வாய்க்கப் பெற்றது என்பதாம்,. புறவுலகில்
    அதற்குச் சிறந்த எடுத்துக் காட்டாக இருப்பது சூரியன்,. அதனுடைய சிறப்பை நமக்கு
    ஞாபகம் ஊட்டுவதற்கு நந்தா விளக்கை வைத்துக் கொள்ளுகிறோம். நந்துதல் என்றால்
    முடிவுறுதல் எனப் பொருள்படுகிறது. எது நந்தாது இருக்கிறதோ அதற்கு முடிவில்லை.
    சந்திரனுடைய வெளிச்சம் அமாவாசையன்று முடிவுறுகின்றது. சூரியப் பிரகாசம்
    அத்தகையதன்று. அது ஓயாது பிரகாசித்துக் கொண்டே இருக்கிறது. சூரியனுக்கு
    உதயமும் இல்லை, அஸ்தமனமும் இல்லை, திரண்ட பேரொளியாய் அது யாண்டும் தன்மயமாய்
    இருக்கிறது. அதன் சன்னிதான விசேஷத்தால் உலகுக்குப் பெருநலன் உண்டாகிறது.

    துணிவகைகளைச் சில சூழ்நிலையில் வைத்திருந்தால் அவைகளில் நச்சுப் பூச்சிகள்
    விருத்தியடைகின்றன. அவைகளால் மனிதனுக்குக் கேடுண்டு. அத்துணிகளை வெயிலில்
    காயப் போட்டால் நச்சுப் பூச்சிகள் அழிந்துபட்டுப் போகின்றன. ஆதலால் பர்க:
    என்னும் பதத்துக்குத் தீங்கைப் போக்கவல்லது என்னும் பொருள்வருகிறது.
    உயிர்வகைகள் ஜலம் மலம் கழிந்து பூமியை அசுத்தப் படுத்துகின்றன. அப்பூமியில்
    ஏராளமாகச் சூரிய வெளிச்சம் படிந்தால் அந்த அசுத்தங்கள் அகற்றப் படுகின்றன.
    ஆதலால் பர்க: என்னும் பதத்துக்கு நிர்மலமாக்கும் திறமை வாய்நதது என்னும்
    பொருள் வருகிறது. சூரிய வெளிச்சம் மனிதனுடைய மேனியின் மீது படிவதற்கு ஏற்பப்
    புதிய பிராண சக்தி மனிதனுக்கு வருகிறது. பச்சிலைகளும் அங்ஙனம் சூரியப்
    பிரகாசத்திலிருந்து பிராண சக்தியைப் பெறுகின்றன. உஷ்ணப் பிரதேசத்தில்
    வெய்யிலிலே உடையொன்றும் போட்டுக் கொள்ளாது உழைக்கின்றவனுக்குப் பசியைத்
    தாங்கும் திறமை மிக உண்டாகிறது. குளிர்ப் பிரதேசத்தில் சதா உடலை உடைபோட்டு
    மூடிவைத்திருக்கின்றவர்கள் பசியைத் தாங்கும் வல்லமை படைத்தவர்கள் அல்லர்.
    இங்ஙனம் சூரியப் பிரகாசம் பலப்பல பாங்குகளில் உலகுக்கு உயிரூட்டுகிறது.

    பர்க: என்னும் பதம் ருத்திரனைக் குறிக்கிறது. அழச் செய்பவன் என்பது ருத்திரன்
    என்னும் பதத்திற்குப் பொருளாம். அழுகையின் மூலம் ருத்திரன் உயிர்களைப்
    பண்படுத்துகிறான். தாங்கமுடியாத வெயிலில் மக்கள் வியர்த்துக் கொட்டிப்
    பதைபதைக்கின்றனர். அதன் வாயிலாக உடலின் உள்ளிருக்கும் அழுக்குகளெல்லாம்
    அப்புறப் படுத்தப் படுகின்றன.

    அத்யாத்மிக அமைப்பில் மனிதனுடைய அந்தராத்மா ருத்ரசொரூபமாக இருக்கிறது. சில
    சூழ்நிலைகளை உண்டுபண்ணி அந்தராத்மாவானது மனிதனைக் கதறிப் பதறி அழச் செய்கிறது.
    அத்தகைய அழுகையின் மூலம் மனிதன் ஆத்ம பரிபாகம் அடைகிறான். உள்ளிருக்கும்
    அந்தராத்மா புறத்திலிருக்கும் சூரியன் போன்று யாண்டும் சுயம் ஜோதியாகப்
    பிரகாசித்துக் கொண்டிருக்கிறது. அந்த ஆத்மப் பிரகாசத்திற்கு உதயமில்லை,
    அஸ்தமனமிலை, மறைத்தலில்லை, புதியதாகக் காட்சிக்குக் கொண்டு வருதல் என்பதும்
    இல்லை. நந்தா விளக்காக சர்வகாலமும் அது ஜொலித்துக் கொண்டிருக்கிறது.
    புறத்தில் தென்படுகிற சூரியனுக்கு ஒப்ப அகத்தில் ஆத்மஜோதியைப் பாவனை பண்ண
    வல்லவன் துவிஜன் ஆகிறான். அந்த ஆத்ம ஜோதியை அனுபூதியில் அறிய வல்லவன்
    நிறைஞானியாகிறான். இங்ஙனம் அகத்திலிருக்கும் ஆத்மப் பிரகாசத்திற்கு ஒப்பப்
    புறத்தில் சூரியனுடைய பேரொளி பிரகாசித்துக் கொண்டிருப்பது தத்துவத்துக்கு
    முற்றிலும் பொருத்தமான விளக்கமாகிறது.

    காயத்ரியில் பரவஸ்துவுக்குப் பொருத்தமான மூன்றாவது பதமாக அமைந்திருப்பது தேவ:
    (देव:) என்பது. காயத்ரியில் அது தேவஸ்ய என்று ஆறாம் வேற்றுமையை எடுத்துக்
    கொள்கிறது. தேவ: என்னும் பதத்துக்குத் திவ்வியமானது, அதாவது தெய்வீகம்
    வாய்க்கப் பெற்றது என்று பொருள். உதயமாகாத சூரியன் நம்முடைய காட்சிக்கு
    நாள்தோறும் உதயமாவது போன்று தென்படுகிறது. உதயமாகின்ற பொழுதானாலும் சரி,
    உச்சநிலையில் இருக்கின்ற பொழுதானாலும் சரி, அஸ்தமனமாகின்ற பொழுதானாலும் சரி,
    அதனிடத்து யாண்டும் தெய்வீகம் திகழ்ந்து கொண்டே இருக்கிறது.

    காயத்ரி ஜபம் பண்ணுகிறவன் புறத்தில் தென்படுகிற சூரியனை ஊனக் கண்கொண்டு பக்தி
    பூர்வமாகப் பார்க்கிறான். பிறகு மனக் கண் கொண்டு அதற்கொப்ப திவ்வியமாகவுள்ள
    அந்தராத்மாவைப் பாவனை பண்ண வல்லவனே துவிஜன் அல்லது இருபிறப்பாளன் ஆகிறான்.
    புறத்திலிருப்பதைக் காண எல்லார்க்கும் இயலுகிறது. காண்பவர்களுள் சூரியனுடைய
    மகிமையை மனதில் வாங்க வல்லவர்கள் மிகச் சிலரே. மனதில் வாங்கிக் கொண்டவர்களுள்
    அகத்திலுள்ள ஆத்மப் பிரகாசத்தை அதனோடு ஒப்பிட வல்லவர்களே நல்ல ஆத்ம சாதகர்கள்
    ஆகின்றனர்.

    இங்ஙனம் அகத்திலுள்ள பாரமார்த்திகப் பெருநிலைக்குப் பொருத்தமான புறச்சான்றாக
    அமைந்திருப்பது வானத்தில் சஞ்சரிக்கும் சூரிய தேவதையாம். கண்டுள்ள ஒன்றை
    உபமானமாக வைத்துக் கொண்டே இனிக் காணப் போகும் ஒன்றை அணுகுதல் வேண்டும்.
    இப்படிச் செய்வது முற்றிலும் பொருத்தமான கல்வி முறையும் ஆகின்றது. காயத்ரி
    மந்திரத்தைக் கையாண்டு புறத்திலிருப்பதை எடுத்துக் காட்டாக வைத்து
    அகத்திலிருப்பதை அணுகுவதற்கு ஆன்றோர்கள் வழிவகுத்து வைத்திருக்கின்றனர்.
    இம்முறையே வேத விதியென்று விளக்கப் பெறுகிறது.

    காயத்ரீ மந்திரத்தில் அடங்கியுள்ள மூன்று வினைச் சொற்களுள் வரேண்யம்
    (वरॆण्यम्) என்பது ஒன்று. வினையின் விளைவே வரேண்யம் என்னும் பெயர்
    உரிச்சொல்லாக வடிவெடுத்திருக்கிறது. விரும்புதல், மாண்பைப் போற்றுதல், சிறப்பை
    விளக்குதல் ஆகிய செயல்களின் விளைவு வரேண்யம் ஆகிறது. புறவுலகில் புலப்படுகிற
    பொருள்களுள் எல்லாராலும் போற்றுதற்கு உரியதாக இருப்பது சூரியன். தன்னளவில்
    சூரியன் போற்றுதற்கு உரிய பெருமைகளை எல்லாம் படைத்திருக்கிறது. வாழ்க்கைக்குப்
    பயன்படுபவைகளுள் முதன்மை வகிப்பது சூரியன். பயன்படுவதை ஒருபுறம்
    ஒதுக்கிவைத்துவிட்டு உள்ளத்தைக் கவரவல்லதைக் கணக்கில் எடுத்துக்
    கொள்ளுமிடத்து, இரும்பைக் காந்தம் கவர்ந்திழுப்பது போன்று காண்போருடைய
    கருத்தைக் கவரவல்லதாய் இருப்பது சூரியன். உதயகாலத்தில் சூரியனை வழுத்துவது
    இந்தியப் பண்பு ஆகிறது. சர்வகாலமும் சூரியவழிபாடு நம் நாட்டில்
    நிகழ்ந்துகொண்டிருக்கிறது. இவ்வழிபாட்டில் நல்ல பழக்கவழக்கம், ஒழுங்குப் பாடான
    வாழ்வு, ஆரோக்கியம், மனத்தெளிவு ஆகிய சிற்ப்புக்கள் இடம்பெறுகின்றன. ஆஸ்திகன்,
    நாஸ்திகன் என்ற பாகுபாடு சூரிய நமஸ்காரத்தைப் பாதிப்பதில்லை. ஆஸ்திகர்,
    நாஸ்திகர் ஆகிய எல்லாரும் உணவு உண்பதில் ஈடுபடுவது போன்றும், உடற்பயிற்சியில்
    ஈடுபடுவது போன்றும் சூரியனைப் போற்றுதலிலும் ஈடுபடுகின்றனர்.

    வாயாரப் புகழுதலில் ஒரு நியமனம் உண்டு. அழிந்து பட்டுப் போகும் பொருள்களைப்
    புகழ்வதெல்லாம் பொருள் சேராத புகழ் ஆகிறது. அழிவற்ற பொருளாகிய பரவஸ்துவைப்
    புகழ்வதே பொருள்சேர்ந்த புகழ் ஆகிறது. சூரியன் பிரளய காலத்தில் ஒடுங்கி
    விடுகிறது. எனினும், சூரியனைப் போற்றுதல் பரவஸ்துவைப் போற்றுவதற்கு நிகர் எனக்
    கருதப் படுகிறது.

    காயத்ரியை அமைத்த தீர்க்கதரிசிகள் இப்பாராட்டுதலைப் பாரமார்த்திகத்துக்குப்
    பயன்படுத்துவாராயினர். புறவுலகில் போற்றிப் பாராட்டுதற்குரியதாகப் பரிதி
    இருப்பது போன்று அகவுலகில் பாராட்டுவதற்குரியவனாகப் பரமன் இருக்கிறான்.
    புறவுலகிலிருக்கும் பாஸ்கரன் பகல் வேளையில் நமக்குத் தோன்றுகின்றான்.
    ஆகையினால் அவன் பகலவன் எனவும் பகரப் பெறுகிறான். அகவுலகில் இருக்கிற பாஸ்கரனோ
    இரவுபகல் அற்றவனாக இருக்கிறான். உள்ளத்தினுள்ளிருக்கும் பரம்பொருளை நாவால்
    வழுத்துவதற்கு ஏற்பச் சொல் சுத்தமடைகிறது. சொல்திறமை அதிகரிக்கிறது.
    உள்ளத்தினுள்ளிருக்கும் ஞானசூரியனைப் போற்றவல்லவர் இருபிறப்பாளர். அப்பொருளைப்
    போற்றுதற்கு ஏற்பப் போற்றுபவனுடைய பண்பு பன்மடங்கு அதிகரிக்கிறது. ஆதலால்
    காயத்ரி மந்திரத்தை ஆத்ம சாதகன் காலையிலும், நண்பகலிலும், மாலையிலும்
    ஜபித்துவர வேண்டும், காயத்ரி மந்திரத்தின் பொருள் தெரியாது ஜபித்தாலும் சொல்
    தெளிவுறுகிறது. சொல்லும் திறமை ஓங்குகிறது. பொருள் உணர்ந்து சொல்லுங்கால்,
    சொல்பவனுடைய அறிவு தீட்டப் பெறுகிறது. அறிவு நுண்ணறிவாக ஓங்குகிறது. பேச்சு
    மனிதனுக்கு அமைந்துள்ள சிறந்த கருவியாகிறது. பேச்சை எவ்வளவுக்கெவ்வளவு
    பாரமார்த்திகத்திலேயே பயன்படுத்துகின்றானோ அவ்வளவுக்கவ்வளவு அவன் பண்பட்ட
    பெருமகன் ஆகின்றான். சிறந்த பக்தர்கள் நரஸ்துதி செய்யாது பரமனையே
    போற்றுவார்கள் என்னும் கோட்பாடு இத்தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டது.

    தீமஹி (धीमहि) என்பது அடுத்த வினைச்சொல். தியானிப்போமாக என்பது அதன் பொருள்.
    பேச்சானது நாவின் செயலாய் இருப்பது போன்று தியானிப்பது உள்ளத்தின் செயலாகிறது.
    தியானம் பண்ணுவதை உள்குதல் என்று இயம்பலாம். விரும்புகிற உருவம் உள்ளத்தில்
    உருவெடுப்பதற்கு ஏற்ப அதன் செயலாகிய உள்குதலும் ஓங்குகிறது. மனம் என்னும்
    அந்தக் கரணம் மனிதனிடத்துச் சிறப்புற்று இருப்பதாலேயே அவனுக்கு மனிதன் என்னும்
    பெயர் வந்துள்ளது. சிந்தனை ஒருமுகப்படுமிடத்து அது தியானம் ஆகிறது. தியானம்
    உயிர்களின் இயல்பில் ஆழ்ந்து இடம்பெற்றிருக்கிறது. அதைப் புதிதாகப் பழகுதல்
    என்பது உண்மையன்று. வாழ்க்கையில் உயிர்கள் கொண்டுள்ள லட்சியத்திற்கு ஏற்ப
    உள்குதல் அல்லது தியானம் பண்ணுதல் நிகழ்ந்து வருகிறது. சாதாரண உயிர்கள் உலக
    வாழ்க்கைக்கு இன்றியமையாத பொருள்களைப் பற்றி எண்ணுகின்றன. பல ஜன்மங்களில்
    உணவைப் பற்றியும் புறவுலகிலிருந்து வருகிற இன்பத்தைப் பற்றியும் தியானித்துப்
    பழகிய மனிதன் அகவுலகிலிருக்கும் ஆத்ம சொரூபத்தைப் பற்றீ தியானம் பண்ண
    ஆரம்பிக்கின்ற பொழுது அவன் துவிஜன் ஆகிறான். தியானம் எவ்வளவுக்கெவ்வளவு
    பரமனைப் பற்றியதாகிறதோ அவ்வளவுக்கவ்வளவு புறவுலகம் புறக்கணிக்கப் படுகிறது.
    உடலுணர்ச்சியை மறந்து ஆத்மபோதத்தில் ஊறியிருப்பது மேலாம் பிறப்பு ஆகிறது.
    மகிழ்ச்சியோடு மனிதன் அதில் சிந்தையைச் செலுத்துகிறான். அவன் நாடுகிற இன்பம்
    புறவுலகில் இல்லை. ஆனந்தமே ஆத்மா; ஆத்மாவே ஆனந்தம். ஆதலால் ஆத்மாவில்
    திளைத்திருப்பவனே இருபிறப்பாளன் ஆகிறான். ஒழுங்காகத் தியானப் பயிற்சி
    பண்ணுவதற்குக் காயத்ரி மந்திரம் நன்கு உதவுகிறது. மானுட ஜன்மத்தின் மேலான பயன்
    பரவஸ்து தியானத்தில் ஆழ்ந்து மூழ்கியிருத்தலாம்.

    ப்ரசோதயாத் (प्रचोदयात्) என்னும் மூன்றாவது வினைச் சொல் தூண்டுகிற என்று
    பொருள்படுகிறது. தூண்டுகிற செயல் மிக முக்கியமானது. தூண்டப் படுவதாலேயே
    உயிர்கள் அனைத்தும் முன்னேற்றம் அடைந்து வருகின்றன. அந்தந்த உயிரின்
    பரிணாமத்துக்குக்கும் பரிபாகத்துக்கும் ஏற்பத் தூண்டுதல் என்னும் செயலானது
    நிகழ்ந்து வருகிறது. கீழ்நிலையிலிருந்து மேல்நிலை வரையில் சான்றுகளோடு கூடி
    விளக்குமிடத்து அச்செயல் நன்கு புலப்படும். பொரித்த குஞ்சு, போட்ட குட்டி,
    பிறந்த சிசு ஆகியவைகள் முதலில் பசியால் தூண்டப் படுகின்றன. உள்ளிருக்கிற
    பேரறிவுப் பொருளே அத்தூண்டுதலை உண்டுபண்ணுகிறது. குஞ்சு வாயைப் பிளந்து இரையை
    எதிர்பார்க்கிறது. தாய்ப் பறவை தன் உடலில் செமித்த உணவை ஊட்டுகிறது. விலங்கின்
    குட்டி தாயின் மடியை நாடித் தள்ளாடிப் போகிறது. மடியை எட்டிப் பால்
    அருந்துகிறது. மானுட சிசு பசியால் அழுகிறது. அதற்குப் பாலூட்டப் படுகிறது.
    இவைகளின் வாழ்வு நிறைவேறுவதற்கு இத்தகைய தூண்டுதல் உள்ளிருந்து வருவது
    அவசியமாகிற்து.

    சற்று வளர்ந்தான பிறகு உள்ளிருந்து வருகிற தூண்டுதல் இரண்டு கூறுகளாகப்
    பிரிவடைகிறது. காப்பாற்றுபவர்களை நாடி அருகில் ஓடுவது ஒரு கூறு. இன்னும்
    குஞ்சாக இருக்கும் பறவை தன் இனத்தினிடத்து மகிழ்வோடு ஓடுகிறது. விலங்கின்
    குட்டியும் அதே செயலைச் செய்கிறது. மானிட சிசு அடையாளம் தெரிந்தவர்களிடம்
    மகிழ்வோடு போகிறது. உள்ளிருக்கும் தூண்டுதல் இங்ஙனம் உடன்பாட்டு முறையில்
    நிகழ்வதாகிறது. பருந்தைப் பார்த்தால் குஞ்சு தாயின் சிறகுக்குக் கீழ்
    பறந்தோடுகிறது. சத்துருக்களாய் இருக்கும் உயிர்களைக் கண்டால் குட்டிகள் விலகி
    ஓடுகின்றன. பாம்பின் அருகில் நாய்க்குட்டி போகாது. வேற்றாரிடமிருந்து மானிட
    சிசுக்கள் விலகிப் போகின்றன. இப்படி இரண்டுவிதத் தூண்டுதல்கள் உள்ளத்தினின்று
    உருவெடுத்து வருவது வாழ்க்கைக்கு முற்றிலும் அவசியமாகிறது. ஆதரவு தருவதை
    அணுகுதலும், ஆபத்தை விளைவிப்பதினின்று விலகியோடுதலும் வாழ்க்கைக்கு
    இன்றியமையாத செயல்களாகின்றன.

    உள்ளிருந்து உந்தித் தள்ளிக் கொண்டிருக்கின்ற ஆற்றல் மக்களிடத்து மேலும்
    பண்பட்ட நிலைக்கு வருகிறது. நலன் தருவதை நாடுதலும், கேரு தருவதினின்று
    விலகியிருப்பதும் மக்களிடத்து அமைகின்ற தனிச்சிறப்பாகும். நலனையும்,
    கேட்டையும் பாகுபடுத்துகிற திறன் சிற்றுயிர்களிடத்திருப்பதைவிட அதிகமாக
    மனிதனிடத்து முன்னேற்றம் அடைந்திருக்கிறது. உள்ளிருக்கும் தூண்டுதலைக் கொண்டே
    கேட்டைக் களையவும், நலனை நாடவும் மனிதன் செய்கிறான். அதற்காகவென்று
    உள்ளத்தினுள்ளே அமைந்துள்ள தூண்டுதல் தெய்விகப் பெற்றி வாய்ந்ததென்று
    பகரவேண்டும்.

    ‘யானேதும் அறியாது என் உள்ளத்து வந்து நல்லனவும் தீயனவும் காட்டா நின்றாய்’
    என்பது கோட்பாடும். இனி உள்ளிருக்கும் தூண்டுதல் பண்பாடடைந்துள்ள பெருமகனிடம்
    மேலும் மேலானதாக மிளிர்கிறது. உடலைப் பேணுதலும் உடல் வாழ்க்கையிலேயே கட்டுண்டு
    கிடப்பதும் வாழ்வின் குறிக்கோள் ஆகாது என்ற தூண்டுதலை உள்ளிருக்கும் அறிவுப்
    பொருள் உண்டுபண்ணுகிறது. பாரமார்த்திகப் பெருவாழ்வை நாடவேண்டுமென்றும் அது
    தூண்டுகிறது. ஆதரவை நாடவும், ஆபத்தை விலக்கவும் செய்த தூண்டுதல் இப்பொழுது
    உயர்நிலையில் உடல்வாழ்க்கையில் பற்றைக் குறைக்கவும், ஆத்மிக வாழ்க்கையில்
    பற்றை வளர்க்கவும் செய்கிறது. எந்த மானுடன் இந்த நிலையை எட்டுகிறானோ அவனே
    துவிஜன் அல்லது இருபிறப்பாளன் ஆகிறான்.

    உயிர்வகைகள் இயல்பாகச் சத்துருக்களிடமிருந்து விலகிப் போவது போன்று துவிஜன்
    ஒருவன் இயல்பாக உடல் பற்றினின்று விலகி சொரூபப் பற்றுதலை வளர்க்கிறான்.
    இயல்பாக அவன் பிரபஞ்சப் பொருள் நாட்டத்திலிருந்து விலகிப் பாரமார்த்திக அருள்
    நாட்டத்தில் ஊக்கம் கொள்ளுகிறான். இயல்பாக அவன் இந்திரியார்த்தங்களினின்று
    விலகித் தன் நிஜ ஸ்வரூபத்தில் நிலைபேறு எய்துகிறான். புளியம்பிஞ்சு
    பழமாகும்போது ஓடு வேறாகவும், பழம் வேறாகவும் பிரிகிறது. அங்ஙனம் துவிஜன்
    ஒருவன் தன்னை உடலில் குடிகொண்டிருக்கும் ஆத்மாவென்று உணர்கிறான்.

    ஆக, துவிஜன் யார் துவிஜன் அல்லாதவன் யார் என்று பாகுபடுத்துவது மிக எளிது.
    எத்தகைய மனப்பான்மை, எத்தகைய விவேகம், எத்தகைய வாழ்க்கை முறை என்பனவற்றைப்
    பார்த்து துவிஜனைத் தெரிந்து கொள்ளலாம். ஜீவகோடிகள் அனைத்தினுடைய உள்ளத்திலும்
    சுடர்விட்டுக் கொண்டிருக்கும் சுயம் ஜோதிப் பொருள் ஒரே பாங்கில்
    வீற்றிருக்கிறது. அந்தந்த ஜீவனுடைய பரிபாகத்துக்கு ஏற்றவாறு அறிவை அந்தச்
    சுடர்ப் பொருள் தூண்டுகிறது. முற்றிலும் பண்பட்டவனுடைய அறிவை அது
    பாரமார்த்திகப் பெருவாழ்வில் தூண்டுகிறது.


    காயத்ரி மந்திரம் பன்மையில் அமைந்திருக்கிறது. “நம் அறிவை விகசிக்கச்
    செய்கின்ற சுடர்க்கடவுளின் மேலான ஒளியைத் *தியானிபோமாக*” எனப் பன்மையில் அது
    அமைந்திருக்கிறது. ஆதலால் இந்த மந்திரம் மக்கள் எல்லார்க்கும் பொதுவுடைமையாக
    இருப்பதே முறை. நல்ல சமுதாயம் கல்வியைப் பொதுவுடைமை ஆக்குகிறது. அக்கல்வியை
    மக்கள் அவரவர் அறிவுத் திறனுக்கேற்ற பிரகாரம் வளர்க்கின்றனர். அதே விதத்தில்
    பாரமார்த்திகப் பெருவாழ்வை மக்களின் பொதுவுடைமை ஆக்கவேண்டும். பின்பு அவரவர்
    பரிபாகத்திற்கு ஏற்பப் பாரமார்த்திகப் பெருவாழ்வில் மக்கள் மேலோங்குகின்றனர்.
    பாரமார்த்திகப் பெருவாழ்வை உறுதிப் படுத்துவதற்கு அமைந்துள்ள மந்திரங்களுள்
    காயத்ரி மந்திரம் தலைசிறந்தது. அதை ஓதவும், உன்னவும், உணரவும் எல்லாரையும்
    தூண்டுவது சான்றோர் செயல். அதைப் பயன்படுத்துவதற்கு ஏற்பச் சமுதாயமானது சீரிய
    சமுதாயமாகத் திருந்தி அமையும்.

    காயத்ரி மந்திரத்தை மற்றவர்களோடு கூடியிருந்து உரக்க உச்சரிக்கலாம். இறைவனுடய
    நாம பஜனத்தை எல்லாரும் ஒன்று கூடியிருந்து உரக்க உச்சரிப்பது போன்று காயத்ரீ
    மந்திரத்தையும் உச்சரித்தல் வேண்டும். பிறகு ஒவ்வொரு ஆத்ம சாதகனும் தன்னுடைய
    இஷ்ட தெய்வத்தின் மந்திரத்தை உச்சரிப்பதற்கு முன்பு காயத்ரீ மந்திரத்தை ஐந்து
    தடவையோ அல்லது அதற்குமேல் அவகாசத்துக்கேற்றபடி அதிகம் தடவையோ உச்சரித்து
    விட்டு இஷ்டதெய்வ நாமஜபம் பண்ணவேண்டும். காலை, மாலை, நண்பகல் ஆகிய மூன்று
    சந்தியா வேளைகளில் இந்த வழிபாட்டில் ஈடுபடுவது உசிதம். நண்பகலில் இதில் ஈடுபட
    இயலாவிடின் ஒரே ஒரு தடவை இந்த ஈடுபாட்டை ஞாபகத்துக்குக் கொண்டுவந்தால்
    போதுமானது.

    உடல் பயிற்சி உடலை உறுதிப் படுத்துவது போன்றும், கல்வி மனத்தைப் பண்படுத்துவது
    போன்றும் காயத்ரீ மந்திரம் மனிதனுடைய ஆத்ம சொரூபத்தை ஓங்குவிக்கிறது. காயத்ரீ
    மந்திரத்தை உரு ஏற்றுபவர்களுக்குத் திரு உண்டாகிறது. ஆடவர், மகளிர் என்னும்
    பாகுபாடின்றிப் பெருவாழ்வை நாடும் பெருமக்கள் எல்லாரும் இந்தச் சிறந்த
    வேதமந்திரத்தை நன்கு பயன்படுத்துவது உசிதம்.

    (முற்றும்)

Howdy, Stranger!

It looks like you're new here. If you want to get involved, click one of these buttons!

Top Posters