கோவலன், கண்ணகி, கவுந்தி அடிகள் மூவரும் மதுரைக்குச் செல்லும் வழியில், கோவலனின் தந்தை கௌசிகன் என்ற பிரம்மச்சாரியை அனுப்பி, கோவலனைத் தேடிக் கண்டுபிடித்து அழைத்து வர அனுப்புகிறார்.
அந்தகக் கௌசிகனும் கோவலனைக் கண்டு," தந்தை ஏவலைக் கேட்டு அதன்படி நடப்பதே சிறப்பானது, அவன் பணியில்லாது அரசாட்சியே கிடைப்பினும் தஞ்சம் என்று அதனைப் பற்றிக் கிடப்பது தீமையாகும் என்று கருதி, தந்தையின் கட்டளைப்படி கானகம் சென்ற ராமனைப் பிரிந்து துன்புற்றிருந்த அயோத்தி போல, உன் பிரிவால் புகாரும் வாடுகிறது" என்று சொன்னான்.
பெருமகன் ஏவ லல்ல தியாங்கணும் அரசே தஞ்சமென் றருங்கான் அடைந்த அருந்திறல் பிரிந்த அயோத்தி போலப் ( line 63-65)
மதுரைக் காண்டம்: ஊர் காண் காதை
மதுரையில் கோவலன் மிக மனம் நொந்து கவுந்தி அடிகளிடம் தன் நிலை பற்றி வருந்துகிறான். அப்போது அடிகள் அவனிடம் வல்வினை என்பது இல்லறத்தர்ற்கு என்றும் உண்டு. இது தொன்று தொட்டு வருவது. சிலர் கதை கூறுகிறேன் கேள்.
தந்தையின் ஏவலால், வேதத்தை அருளிய நான்முகனைப் பெற்றவன்,( திருமாலாகிய ராமன்) தன் மனைவியுடன் கானகம் ஏகி, அவளைப் பிரிந்து கடும் துயரம் உற்றான், என்று கூறுகிறார்.
தாதை ஏவலின் மாதுடன் போகிக் காதலி நீங்கக் கடுந்துய ருழந்தோன் வேத முதல்வற் பயந்தோ னென்பது நீயறிந் திலையோ நெடுமொழி யன்றோ ( line 45-49)