பல்லவ மன்னர்கள் கலா ரசிகர்கள். காஞ்சீபுரம், மாமல்லபுரம், திருச்சி போன்ற இடங்களில் உள்ள பல்லவர்களுடய சிற்பங்களும், ஓவியங்களும் காண்போரை மெய்மறக்க செய்கின்றன. மாமல்லபுரத்தில், அர்ஜுனன் தவம் என்று அழைக்கப்படும் அற்புதக்காட்சியில் விண்ணுக்கும் அப்பாலிருந்து நிலத்தில் வீழும் கங்கை ஆறும் அதன் கரையில் நின்று கடுந்தவம் புரியும் பார்த்தனும், அப்பார்த்தனுக்கு பாசுபதம் அளித்த பரமனும், இக்காட்சியை காணவரும் நிலவும், நிலவுக்கு ஒளி அளிக்கும் செல்வனும், அமரரும், இயக்கர், கின்னரர், கிம்புருடர், கந்தர்வர், சித்தர், சாரணர் எனப் பதினெண் கணங்களும், இப்பெரும் காட்சியை, முழையிலே இருந்து எட்டிப் பார்க்கும் புலியும், இறைக்காக தவம்புரியும் கிழப்பூனையும், அழகிய யானைக்கூட்டமும் என பல அற்புதக் காட்சிகள் உள்ள இந்தப்படைப்பையும், அருகிலேயே பரந்த குன்றையே கையில் அனாயாசமாகக் கண்ணன் தூக்கி ஆநிரைகாத்த காத்த காட்சியும், தூக்கி நிறுத்தப்பட்ட குன்றின் கீழிடத்தைப் புகலிடமாகக் கொண்டு கவலையின்றி காணப்படும் ஆயரும், ஆய்ச்சியரும், ஆநிரைகளும், கவலையின்றி அமர்திருக்கும் காளை மாடும், அன்போடு தன் கன்றை நாவினால் தடவிக்கொடுக்கும் தாய் பசுவும் என அற்புத காட்சியையும், இதற்கருகிலேயே உள்ள கோயிலில் புகழ்வாய்ந்த மகிஷாசுரமர்தினியின் காட்சி அமைக்கப்பட்டிருப்பதையும் மனதில் நினைத்துக்கொண்டு பார்த்தோமானால் இது பல்லவர் கொலுவோ? என்று எண்ணத்தோன்றுகிறது.
அனைவரும் நலமுடன் சுபிக்ஷமாக இருக்க இறைவனை பிரார்த்திப்போமாக.