Thanjavur Big Temple Meet 25th Sep 2016
சந்திப்பில் கலந்துக்கொண்ட நண்பர்களில் பலர் ஞாயிறன்று காலை முதலே தஞ்சைக்கு வரத் தொடங்கிவிட்டனர்…அவர்கள் முடிந்தவரை ஒருவரை ஒருவர் தொடர்புக் கொண்டு சிறு சிறு குழுக்களாக இணைந்து தஞ்சையில் காண வேண்டிய மற்ற சில முக்கிய இடங்களான தஞ்சை அரண்மணை, ராஜராஜர் மணிமண்டபம், விஜயாலய சோழர் ஸ்தாபித்து வழிபட்ட நிசும்பசூதனி அம்மன் சிலை உள்ள வடபத்ரகாளியம்மன் கோவில் போன்ற சில இடங்களை சுற்றிப் பார்த்துவிட்டு, மதியம் இரண்டு மணி முதலே பெரிய கோவிலில் ஒன்றுக் கூடத் தொடங்கினர்…சரியாக 3.30 மணிக்கெல்லாம் சந்திப்பில் கலந்துக்கொண்ட நண்பர்களில் 90% பேர், ஏற்கனவே நாங்கள் குழுவில் அறிவித்த படி, பெரிய கோவிலின் பின்புறத்தில் உள்ள விநாயகர் சந்நிதியின் பின்னால் ஒன்று கூடினர்…அதன் பிறகும் நண்பர்கள் வந்துக்கொண்டிருந்தனர்…சென்னை, ஹைதராபாத், கோவை, சத்தியமங்கலம், பாண்டிச்சேரி, விழுப்புரம்,காஞ்சிபுரம், திருப்பூர்,மயிலாடுதுறை, திருநெல்வேலி உள்ளிட்ட பல நகரங்களிலிருந்து நண்பர்கள் வந்திருந்தனர்…சரியாக மாலை 4 மணியளவில் நம் பொன்னியின் செல்வன் குழுக்களின் நிறுவனர் திரு. சுந்தர் பரத்வாஜ் (சிவபாத சேகரன்) அவர்கள் வருகைப் புரிந்தார்கள்…அவருடன் வந்திருந்த தஞ்சை இளவரசர் திரு.பாபாஜி போன்ஸ்லே அவர்களின் உதவியாளர், காரியதரிசி, மெய்க்காப்பாளர் மற்றும் தஞ்சை பெரிய கோவில் நிர்வாக அதிகாரி ஆகியோரை அனைவருக்கும் திரு.சுந்தர் பரத்வாஜ் அவர்கள் அறிமுகம் செய்து வைத்தார்…பின், அரண்மனை மற்றும் பெரிய கோவில் நிர்வாகத்தினர் நமக்காக ஏற்பாடு செய்திருந்த ஜமுக்காளங்கள் தரையில் விரிக்கப்பட்டது…அவற்றில் நண்பர்கள் அனைவரும் அமர்ந்ததும் விழா இனிதே தொடங்கியது…
முதலில் நண்பர்களுக்கு, திரு. சுந்தர் பரத்வாஜ் அவர்கள் ஏற்பாடு செய்திருந்த தண்ணீர் பாட்டில் விநியோகிக்கப்பட்டது…பிறகு, நான் வரவேற்புரை வழங்கினேன்…அதன் பின் திரு. வெங்கடேஷ் ராமகிருஷ்ணன் அவர்கள் ‘தான் காவிரி மைந்தன் நாவலை எழுத தூண்டிய விஷயங்கள்’ என்ற தலைப்பில் சுமார் அரைமணி நேரம் சிறப்புரையாற்றினார்…ஒரு நாவலுக்கு தொடர்ச்சியாக ஒரு நாவல் எழுதுவதில் இவ்வளவு விஷயங்கள் இருக்கின்றனவா என அனைவரையும் அவரது சிறப்புரை ஆச்சர்யம் கொள்ள செய்தது…அதன் பின், சென்ற வருடம் அல்லாமல் இவ்வருடம் புதிதாக சந்திப்பில் கலந்து கொள்ள வந்திருந்த நண்பர்களின் சுய அறிமுகம் நடைப்பெற்றது…பிறகு,சந்திப்பில் கலந்துக்கொண்ட நண்பர்கள் அனைவரும் குழுப்புகைப்டம் எடுத்துக்கொண்டோம்…திரு.பாஸ்கரன் செல்லப்பன், திரு.வேலுதரன் மற்றும் சில நண்பர்கள் புகைப்படம் எடுத்தனர் (புகைப்படம் எடுத்த நண்பர்கள் சிலர் முதன்முறை சந்திப்பில் கலந்து கொண்டவர்கள் என்பதால் அவர்களது பெயர்கள் தெரியவில்லை…மன்னிக்கவும்)…
பின்பு, நண்பர்களுக்கு ‘தஞ்சையில் நாம் தவறாமல் காண வேண்டிய 20 இடங்களை’ பற்றி விளக்கி கூற, திரு.சுந்தர் பரத்வாஜ் மற்றும் திரு. வெங்கடேஷ் ராமகிருஷ்ணன் ஆகியோர் நண்பர்களை அந்தந்த இடங்களுக்கே அழைத்து சென்றனர்…முதலில் கோவிலின் தென்மேற்கு மூலையில் உள்ள போன்ஸ்லே வம்ஸ சரித்திர மராட்டிய கல்வெட்டுகளை பற்றி கூறினார்கள்…அதன் பிறகு, நண்பர்கள் அனைவருக்கும் திரு.சுந்தர் பரத்வாஜ் அவர்கள் ஏற்பாடு செய்திருந்த தேநீர் வழங்கப்பட்டது…
பின்பு, கருவூரார் சன்னதி, வந்தியத்தேவன் கல்வெட்டு, முருகன் சன்னதி கோபுரத்தில் உள்ள 52 முருகன் சிற்பங்கள், அதே சன்னதியின் பின்பக்கமுள்ள 3மி.மீ அளவுள்ள துளைகள் ஆகியவற்றை பார்த்துவிட்டு கோவிலின் வடக்கு புறத்திற்கு வந்து சேர்ந்தோம்…
அங்கே உள்ள திருச்சுற்று மாளிகையில் உள்ள ‘அனுக்கன் வாயில்’ என்ற வாயில் ஒன்றை திரு.வெங்கடேஷ் ராமகிருஷ்ணன் அவர்கள் காட்டினார்கள்…ஆரம்பத்தில் நண்பர்கள் அனைவரும் அதை ஒரு சாதாரண வாயில் என்றே எண்ணினோம்…அவ்வாயிலை பற்றி திரு.வெங்கடேஷ் ராமகிருஷ்ணன் அவர்கள் விளக்கி கூற கூற அங்கிருந்த அனைவர் முகத்திலும் ஆச்சர்யமும், பயபக்தியும் தோன்றின…ஆம், அந்த அனுக்கன் வாயில் சாதாரண வாயில் அல்ல….நம் பொன்னியின் செல்வராம் இராஜராஜ சோழர் அந்த அனுக்கன் வாயில் வழியாக தான் வந்து பெருவுடையாரை தரிசிப்பாராம்…இந்த தகவலை திரு.வெங்கடேஷ் ராமகிருஷ்ணன் அவர்கள் கூறிய பொழுது அங்கிருந்த அனைவருக்கும் உடல் சிலிர்த்துதான் போனது…
பின்பு, தஞ்சை விமானத்தில் உள்ள வெளிநாட்டவர் சிற்பம், கல்வெட்டு தொடங்கும் இடம், பாண்டியர்களால் அமைக்கப்பட்ட அம்மன் சன்னிதி சிற்பங்களில் சில, ஆகியவற்றை பார்த்துவிட்டு கோவிலின் முன்பக்கமான கிழக்கு பக்கத்திற்கு வந்து சேர்ந்தோம்…அங்கு நாயக்கர் கால பெரிய நந்தியை பார்த்துவிட்டு, கோவிலுக்கு வெளியே வந்தோம்…இராஜராஜன் வாயில் மறறும் கேராளந்தகன் வாயிலில் உள்ள துவாரபாலகர்கள் மற்றும் புராண கதைகளை விளக்கி கூறும் சிறிய சிறிய சிற்பங்களை பார்த்துவிட்டு மீண்டும் கோவிலினுள் வந்தோம்…இதற்கிடையில் கேரளாந்தகன் வாயிலில் ஓர் சிதைந்து போயிருந்த கல்வெட்டை காட்டி ‘இராஜராஜர் தஞ்சை விமானத்திற்கு பொன் வேய்ந்ததற்கான ஆதாரம் உள்ள கல்வெட்டு இதுதான்’ என திரு.சுந்தர் பரத்வாஜ் அவர்கள் கூறிய பொழுது நெஞ்சம் ஏனோ மிகவும் கலங்கியது…அக்கல்வெட்டைப் பற்றி திரு.சுந்தர் பரத்வாஜ் அவர்களிடம் வினவிய திரு.வேலுதரன் அவர்களுக்கு மிக்க நன்றி…இல்லையெனில் அக்கல்வெட்டு குறித்து நாங்கள் அறியாமலே போயிருப்போம்….
அதன் பின்பு, கோயிலின் தென்கிழக்கு மூலையில் உள்ள அக்னி பகவானது சிலையை பார்க்க சென்றோம்…அக்னி பகவானது சிலை மடப்பள்ளியினுள் அமைந்துள்ளது..’அட்டில்’ எனப்படும் இந்த மடப்பள்ளியானது இராஜராஜரின் காலம் முதல் இன்று வரை இயங்கி வருகிறது…சாதாரணமாக யாரையும் மடப்பள்ளியினுள் அனுமதிக்க மாட்டார்கள்…மடப்பள்ளியினுள் சென்று அக்னிபகவானை தரிசிக்க வழிவகை செய்த கோயில் நிர்வாகத்தினருக்கு எவ்வளவு நன்றி கூறினாலும் மிகையாகாது…அதன் பின் இராஜராஜர் அமைத்த நந்தியையும், கோவில் கட்டுமானத்தின் பொழுது இரும்பை குளிர்விக்க பயன்பட்ட கல் தொட்டியையும் பார்த்துவிட்டு, கோயிலினுள் உள்ள அருங்காட்சியகத்தில் கோவிலின் மேல்தளத்தில் உள்ள ஓவியங்கள் மற்றும் சிற்பங்களின் மாதிரிகளை பார்த்தோம்…பின்பு சந்திப்பில் கலந்துக் கொண்ட நண்பர்கள் அனைவரும் தஞ்சை பெருவுடையாரை கருவறைக்கு மிக அருகில் நின்று தரிசிக்க ஏற்பாடு செய்திருந்தனர்…பெருவுடையாரை மிக அருகில் நின்று தரிசித்த நண்பர்கள் அனைவரது முகத்திலும் மனநிறைவு நன்றாகவே வெளிப்பட்டதை காண முடிந்தது…இதற்கு ஏற்பாடு செய்த கோவில் நிர்வாகத்தினருக்கும், திரு.சுந்தர் பரத்வாஜ் அவர்களுக்கும் எவ்வளவு நன்றி கூறினாலும் மிகையாகாது…
அதற்கு பிறகு, அனைவரும் மீண்டும் விநாயகர் சன்னிதியின் பின்புறம் வந்தமர்ந்தோம்…அங்கே நண்பர்களுக்கு டாக்டர்.திரு.இரா.நாகசாமி எழுதிய ‘ஆயிரம் கலை கண்ட அருள்மொழியே வாழி’ என்ற புத்தகமும், திரு.சுந்தர் பரத்வாஜ் அவர்கள் ஏற்பாடு செய்திருந்த குளிர்பானமும் விநியோகிக்கப் பட்டது…திரு.சுந்தர் பரத்வாஜ் அவர்களும் திரு.செல்வராஜ் அவர்களும் உடையாளூர் இராஜராஜர் பள்ளிப்படை பற்றியும், இராஜராஜ சோழர் மற்றும் இராஜேந்திர சோழர் குறித்தும் பல அரிய தகவல்களை கூறினர்…
இறுதியாக திரு.ராஜா நன்றியுரை கூற விழா இனிதே நிறைவுற்றது..சந்திப்பில் கலந்துக் கொண்ட நண்பர்கள் அனைவரும் பிரியாவிடை பெற்று சென்றனர்…
இந்த சந்திப்பு நடைபெறுவதற்கு முழு ஒத்துழைப்பு நல்கிய திரு.சுந்தர் பரத்வாஜ் , திரு.வெங்கடேஷ் ராமகிருஷ்ணன், திரு.ராஜா, திருமதி.பௌசியா இக்பால், திரு. முருகானந்தம் பாலகிருஷ்ணன், திருமதி. பர்வதவர்தினி, திரு.வேலுதரன், திரு.பாஸ்கரன் செல்லப்பன் ஆகியோருக்கு மனமார்ந்த நன்றிகள்…சந்திப்பிற்கு வருகை தந்த நண்பர்களுக்கும், வாழ்த்திய அனைத்து நல் உள்ளங்களுக்கும் மிக்க நன்றி 🙂