*ரூ. 14.75 கோடியில் தஞ்சாவூர் அரண்மனை புனரமைப்பு :* (தினமணி 31-7-2012)
ரூ. 14.75 கோடியில் தஞ்சாவூர் அரண்மனையை புனரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகளை தமிழக வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சித் துறை அமைச்சர் ஆர். வைத்திலிங்கம் சனிக்கிழமை ஆய்வு செய்தார். தஞ்சாவூருக்கு பெருமை சேர்க்கும் உலக பிரசித்தி பெற்ற தஞ்சாவூர் அரண்மனை வளாகத்திலுள்ள கட்டடங்களைப் பெருஞ்சுற்றுலாத் திட்டத்தின் கீழ், பழமை மாறாமல் புனரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிக்காக தமிழக அரசால் ரூ. 17.19 கோடிக்கு கருத்துரு தயாரிக்கப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இதில் ரூ. 14.75 கோடிக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியது. தமிழக அரசு 50 சதமும், மத்திய அரசு 50 சதமும் நிதியை ஒதுக்கியது. முதல்கட்டமாக, ரூ. 7.37 கோடியில் புனரமைக்கும் பணிக்கு ஒப்புதல் பெறப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகளை தமிழக வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சித் துறை அமைச்சர் ஆர். வைத்திலிங்கம் சனிக்கிழமை ஆய்வு செய்தார். அப்போது, பணிகளை விரைந்து முடிப்பதுடன், அரண்மனைக் கட்டடங்களின் பழமை மாறாமல் புனரமைக்க வேண்டும் என அமைச்சர் அறிவுறுத்தினார். அரண்மனை வளாகத்திலுள்ள வடக்கு ஹாஜ்ராம் நுழைவு வாயிலில் ரூ. 284.43 லட்சத்தில் பூச்சு வேலைகளும், சரஸ்வதி மஹால் நூலகப் பகுதி கட்டடங்களில் ரூ. 124.50 லட்சத்தில் புனரமைப்புப் பணியும், மாராட்டா தர்பார் கூடம் ரூ. 134.57 லட்சத்திலும், நாயக்கர் தர்பார் கூடம் ரூ. 126.20 லட்சத்திலும், ஆயுதக் கோபுரம் பகுதிகள் ரூ. 143 லட்சத்திலும், சந்திரமெüரீஸ்வரர் ஆலயப் பகுதி ரூ. 94.50 லட்சத்திலும், புரதானக் கூடம் ரூ. 95 லட்சத்திலும், மணிகோபுரம் ரூ. 28.50 லட்சத்திலும், வாபிகுளம் ரூ. 7.10 லட்சத்திலும் புனரமைக்கப்படவுள்ளது. தமிழக முதல்வரின் வழிகாட்டுதல்படி, பழமை வாய்ந்த தஞ்சாவூர் அரண்மனைக் கட்டடங்களில் இப்பணிகள் நடைபெற்று வருகின்றன. திட்ட மதிப்பீட்டுத் தொகை முழுமையும் பெறப்பட்டு இப்பணிகள் விரைவில் நிறைவுப்பெறும் என்றார் அமைச்சர். மாவட்ட ஆட்சியர் கா. பாஸ்கரன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் எம். ரங்கசாமி, ரா. துரைக்கண்ணு, எம். ரத்தினசாமி, உதவி ஆட்சியர் (பயிற்சி) அருண்சத்யா, பொதுப்பணித் துறை செயற்பொறியாளர் (கட்டடங்கள்) பாஸ்கரன், சுற்றுலா அலுவலர் ராமமூர்த்தி, தஞ்சாவூர் நகர்மன்றத் தலைவர் சாவித்திரிகோபால், அருங்காட்சியக காப்பாளர் சிவக்குமார், உதவிப் பொறியாளர் ரமேஷ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.