About Singapore
 • Dear All,

  I read this article in Dinamalar Vaaramalar about Singapore.Any comments please?

  ஜே.எம்.சாலி

  கிழக்காசிய நாடுகளுள் குறிப்பிடத்தக்கது சிங்கப்பூர். இந்நாட்டிற்கு முதன் முதலாக, "சிங்கப்பூரா' என்று பெயர் சூட்டியவர்கள் நம் தமிழ்நாட்டு அரச பரம்பரையினர்தான்.
  துமாசிக் என்று அழைக்கப்பட்டு வந்த நாட்டுக்கு, சிங்கப்பூரா என்று பெயரிட்டவர் இளவரசர் திரிபுவனா என்பது சரித்திரக் குறிப்பு. ராஜேந்திர சோழனின் வாரிசான நீல உத்தமன் கி.பி., 1160ல் சிங்கப்பூராவை நிறுவியதாகக் கூறப்படுகிறது. அப்போதெல்லாம் சோழ மன்னர்களுக்கும், பல்லவர்களுக்கும் இந்த நாட்டுடன் நெருங்கிய தொடர்பு இருந்து வந்தது. ஆங்கிலேயரின் ஆட்சிக்கு கீழ் வந்த
  பிறகு சிங்கப்பூர் புதுப்பிக்கப்பட்டது.
  அன்றைய கல்கத்தாவில் பிரிட்டிஷ் அர சாங்க அதிகாரியாக இருந்த ஸ்டாம்போர்ட் ராபிள்ஸ் இங்கு அனுப்பப்பட்டார். அரசாங்கக் கட்டடங்களையும், வீதிகளையும், ஆலயங்களையும் அமைப்பதற்காக நாராயண பிள்ளை என்பவரை அழைத்து வந்தார் ராபிள்ஸ். கடலூரைப் பூர்வீகமாகக் கொண்டவர் நாராயண பிள்ளை. இன்னொருவர் நாகப்பட்டின வம்சாவழியினரான முன்ஷி அப்துல்லா. மலாய் மொழி உரைநடையின் தந்தை
  என்று புகழப்படும் இவர், தமிழிலேயே தொடக்கக் கல்வியை கற்றவர்.
  ராபிள்ஸ், 1819 பிப்ரவரியில், நவீன சிங்கப்பூரை உருவாக்கத் துவங்கினார். பினாங்கில் வாழ்ந்த தன் நண்பர்களையும், தச்சர், கொல்லர், கட்டடச் சிற்பிகள், துணி வணிகர்களை சிங்கப்பூரில் குடியேறத் தூண்டினார் நாராயண பிள்ளை.
  பல இன மக்களும் தொடர்ந்து இங்கு வரத் தொடங்கியதால், நாராயண பிள்ளை நிறைய வீடுகளைக் கட்டிக் கொடுத்தார்; துணி வணிகமும் செய்தார். மூன்றே ஆண்டுகளில் செல்வாக்குமிக்க குத்தகையாளராகவும், வணிகராகவும் விளங்கிய நாராயண பிள்ளையை இந்தியர்களின் ஒரு தலைவராக ஏற்றுக் கொண்டது பிரிட்டிஷ் அரசாங்கம்.
  முன்ஷி அப்துல்லா பலமொழி அறிந்தவராக இருந்ததால், அவரை செயலராக நியமித்துக் கொண்டார் ராபிள்ஸ்.
  தமிழர்களின் வழிபாட்டுக்கு ஆலயங்கள் தேவைப்பட்டதால், ஆச்சர்ட் சாலையில் 1821ல் சிவன் கோவில் கட்டப்பட்டது. அடுத்தடுத்து, பல பெரிய ஆலயங்கள் உருவாக்கப்பட்டன.
  மாரியம்மன் கோவில் 1830ல், மற்றொரு சிவன் கோவில் 1850-55ல், பெருமாள் கோவில் 1855ல், தண்டாயுதபாணி கோவில் 1859ல் கட்டப்பட்டன.
  சிங்கப்பூரில், 1850ல் இந்தியர்களின் மொத்த மக்கள் தொகை 6,284. பத்து ஆண்டுகளில் இந்தியர்களின் எண்ணிக்கை 12,971 ஆக உயர்ந்தது.
  ஆங்கிலேயர் அரசுக்கு தமிழ் மொழி பெயர்ப்பாளர்கள் தேவைப்பட்டதால் நிறைய தமிழர்கள் வேலைக்கு அமர்த்தப்பட்டனர். முதன்முதலாக சிங்கப்பூர் நீதிமன்றத்தில் பணியாற்ற இரண்டு இலங்கைத் தமிழர்கள் 1874ல் அழைக்கப்பட்டனர்.
  சிங்கப்பூரில், சீன, மலாய் இதழ்கள் தோன்றுவதற்கு முன்பே, தமிழ் இதழ்கள் வெளிவரத் தொடங்கின. 1876ல் தீனோதய அச்சகத்தை மகுதூம் சாயபு தொடங்கினார். அவர், "சிங்கை வர்த்தமானி' "சிங்கை நேசன்' ஆகிய இதழ்களை நடத்தினார். 1888ல், "சிங்கை நேசன்' செல்வாக்குமிக்க இதழாக வெளிவரத் தொடங்கியது. சிங்கப்பூர் சிறுகதை இலக்கிய முன்னோடியாகக் கருதப்படுகிறார் மகுதூம் சாயபு.
  தீவுகளில் சிறை வைக்கப்பட்டிருந்த இந்திய கைதிகளை வேலை வாங்குவதற்காக சிங்கப்பூருக்கு அனுப்பத் தொடங்கியது பிரிட்டிஷ் அரசு. அதன்படி, 1825 ஏப்ரலில், 80 கைதிகள் வந்தனர். 1832ல் அவர்களின் எண்ணிக்கை 1,200 வரை உயர்ந்தது. இந்தக் கைதிகளில் 200 பேர், எட்டே மாதங்களில் 28 ஏக்கர் சதுப்பு நிலத்தை சரி செய்து, சாலைகளை அமைத்தனர். அதற்கு ஆன செலவு 500 சிங்கப்பூர் வெள்ளி. மீட்கப்பட்ட இடங்களில்
  மர வீடுகள் கட்டப்பட்டன. அதனால், நிலத்தின் விலை உயர்ந்தது.
  இந்தியக் கைதிகளே சவுத் பிரிட்ஜ் சாலை மாரியம்மன் கோவிலை அமைத்தனர். பிரபலமான புனித ஆண்ட்ரூஸ் தேவாலயத்தையும் அவர்களே கட்டினர். இப்போதுள்ள அதிபர் மாளிகையான இஸ்தானா, சிங்கப்பூர் பொது மருத்துவமனை, டான் டாக் செங் மருத்துவமனை ஆகியவற்றையும் கைதிகளே கட்டினர்.
  பிரபலமான சாலைகளான சிராங்கூன் ரோடு, சவுத் பிரிட்ஜ் ரோடு, நார்த் பிரிட்ஜ் ரோடு, தாம்சன் ரோடு, புக்கிட் தீமா ரோடு முதலானவை அவர்களின் உழைப்பினால் உருவானவைதான்.
  புனித ஆண்ட்ரூஸ் தேவாலயத்தைக் கட்ட ஒரு லட்சத்து 20 ஆயிரத்து 932 ரூபாய் செலவாகும் என்று மதிப்பிடப்பட்டது. ஆனால், கைதிகளின் உழைப்பால் 47 ஆயிரத்து 916 ரூபாயில், 1856 - 63ல் இந்த தேவாலயம் கட்டி முடிக்கப்பட்டது.
  சவுத் பிரிட்ஜ் சாலையிலுள்ள தென்னிந்திய முஸ்லிம்கள் தொழுகை இடமான சோலியா (சோழ மண்டலம்) பள்ளிவாசல் 1827ல் அன்சார் சாஹிப் என்ற புரவலரின் முயற்சியால் அமைக்கப்பட்டது. இப்போதுள்ள அந்தப் பள்ளி வாசல் 1835ல் விரிவுபடுத்தப்பட்டது.
  தெலுக் ஆயர் தெருவில் அமைந்திருக்கும் குச்சுப்பள்ளி என்று அழைக்கப்பட்ட அல் அப்ரார் பள்ளிவாசல் 1850-55ல் இந்திய முஸ்லிம்களால் கட்டி முடிக்கப்பட்டது. அதே தெருவில் நாகூர் தர்காவும் அமைக்கப்பட்டது.
  சிங்கப்பூரில் முதல் தமிழ் பள்ளி, பதினெட்டு பிள்ளைகளுடன் 1834ல் தொடங்கியது. ஒரே ஆண்டில் அந்த பள்ளி மூடப்பட்டது. நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, 46 பிள்ளைகளுடன் ஆரம்பமான தமிழ் பள்ளியும் நீடிக்கவில்லை.
  வாட்டர்லூ தெருவில், 1859ல் புனித பிரான்சிஸ் சேவியர் மலபார் பள்ளிக் கூடமும், 1862ல் கிறிஸ்டபர் மாரியப்பப் பிள்ளை தமிழ்ப் பள்ளிக்கூடமும் அமைக்கப்பட்டன. அருகிலுள்ள பிரின்சப் தெருவில் மற்றொரு தமிழ்ப் பள்ளிக் கூடமும் நடத்தப்பட்டது. ஒவ்வொரு பள்ளியிலும் 30 மாணவர்கள் படித்தனர். வெள்ளையர் அரசாங்கம் 1873ல் இரு ஆங்கிலோ - தமிழ் பள்ளிக் கூடங்களை அமைத்தது.
  சோபியா சாலை வட்டாரத்தில் அமைந்துள்ள மெதடிஸ்ட் பெண்கள் பள்ளி 1887ல் தமிழ் சிறுமிகளுக்காக துவங்கப்பட்டது.
  இன்று —
  பாலர் பள்ளி முதல் பல்கலைக்கழகம், பார்லிமென்ட் வரை எங்கும், எதிலும் செம்மொழித் தமிழ் கொடிகட்டி பறக்கிறது. சிங்கப்பூரில் 55 ஆண்டுகளாக ஆட்சி மொழியாகத் திகழ்கிறது செந்தமிழ்.

Howdy, Stranger!

It looks like you're new here. If you want to get involved, click one of these buttons!

Top Posters