Open House Discussion

நண்பர்களே, நேற்று நடந்த பொன்னியின் செல்வன் வரலாற்றுப் பேரவை விழாவில் நடந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மாமன்னன் ராஜராஜ சோழன் குறித்து நமது குழு சார்பாக எழுப்பப்பட்ட வினாக்கள் மட்டும் பதில்களின் விவரங்கள் இதோ: (விரிவான பதில்களைக் காண விரைவில் வெளிவரும் காணொளியில் காணலாம். இந்த பதில்கள் வெறும் சாராம்சம் மட்டுமே).

நன்றி முருகானந்தம் பாலகிருஷ்ணன்

1) கே: ராஜராஜ சோழன் பிறந்த ஆண்டு குறித்து வரலாற்று ரீதியிலான சரியான ஆதாரங்கள் உண்டா ?

ப: கல்வெட்டுகளிலும், செப்பேடுகளிலும் ஆட்சிக்காலம், ஆண்டுகள் குறித்த விவரங்கள் மட்டுமே காணக்கிடைக்கின்றன. எனவே, பிறந்த ஆண்டு, பிறந்த ஆண்டு குறித்து அறுதியிட்டுக் கூற முடியாது.

2) கே: வந்தியத்தேவன் குறித்து வரலாற்று ரீதியிலான ஆதாரங்கள் வேறு உள்ளனவா ? குந்தவையை மணந்து கொண்டதால் அதற்குப் பிறகு தான் அவருக்கு முக்கியத்துவம் கிடைக்கப்பெற்றதா ?

ப: வாணர்குலத்தைச் சேர்ந்த வந்தியத்தேவன் மற்ற குறு நில மன்னர்களான பழுவேட்டரையர்கள், சம்புவரையர்கள், கொடும்பாளூர் வேளிர்களைப் போல குறு நில மன்னராக இருந்திருக்கக்கூடும். வாணர்குலத்தின் முழு வரலாற்றையும் தொகுத்து வெளியிடும் பணியில் வானவராயர் ஃபவுண்டேஷன் ஈடுபட்டு வருவதாக விஜய் தெரிவித்தார்.

3) கே: வந்தியத்தேவன் மகளை ராஜராஜன் மணந்தாரா ?

ப: இதற்கு சரியான ஆதாரங்கள் இல்லை.

4) சோழ மன்னராவதற்கு மதுராந்தகத் தேவரைவிட அருண்மொழித் தேவருக்கு என்ன கூடுதல் உரிமை உள்ளது ? தர்மப்படி பார்த்தால் மதுராந்தகருக்குத் தானே உரிமை அதிகம் ?

ப: இந்த தார்மீகக் கேள்விகள் கி.பி.960-களின் பிற்பகுதியில் சோழ மண்டல குறு நில மன்னர்கள், அதிகார வர்க்கத்தினர், படைத் தளபதிகள் மத்தியில் எழுந்திருக்கக்கூடும். அரசர்கள், அரசாங்க நிர்வாகம் என்பது இப்பொழுது போலவே அப்பொழுதும் இரு இயக்கங்களாக இருந்திருக்க வேண்டும். அரச குடும்பத்தில் ஏற்பட்டு விட்ட இந்த தர்மச் சிக்கல்களை நிவர்த்தி செய்ய குறு நில மன்னர்கள், அதிகார வர்க்கத்தின் உயர்மட்டத்தினர் முயன்றிருக்கக்கூடும். அந்த முயற்சியின் விளைவில் கைகலப்பு, சண்டை ஏற்பட்டு ஆதித்த கரிகாலன் கொல்லப்பட்டிருக்கக்கூடும். திருமதி.பத்மாவதி அவர்களின் கூற்றுப்படி, ஆதித்த கரிகாலன் ஒரு சதிச்செயலின் காரணமாக இறந்திருக்க வாய்ப்பில்லை என்றும், ஆதித்த கரிகாலனின் இறப்பு அப்பொழுது நிகழ்ந்திருக்கலாம் என்றும் கருதுவதாகத் தெரிவித்தார். எனவே, ஆதித்தகரிகாலனின் மறைவையொட்டி, மேலும் சிக்கலாக்க விரும்பாமல் ஒரு அரசியல் உடன்படிக்கை ஏற்பட்டிருக்கவும் வாய்ப்பு இருப்பதாகக் கருதவும் இடமிருக்கிறது. ஆனால், திருவாலங்காட்டுச் செப்பேடுகளின்படி, ராஜராஜன் செய்தது தியாகம் என்று குறிக்கப்படுவதால், வரலாற்றில் அரசபதவியைத் தியாகம் செய்த ஒரே மனிதன் என்ற பெருமை அருண்மொழித்தேவரையே சாரும் என்றும் சில நிபுணர்கள் கருதுகின்றனர்.

5) கே: மதுராந்தகச் சோழன் ஆட்சிக்காலத்தில் அருண்மொழித்தேவரின் நிலை என்ன ? செயல்பாடுகள் யாவை ?

ப: கி.பி.970 முதல் கி.பி.985 வரை அருண்மொழித்தேவர் குறித்து கல்வெட்டு விவரங்கள் இல்லை. எனவே, அவர் என்ன செய்திருக்கக்கூடும் என்பவை அனுமானங்களே.

6) கே: தேவார ஓலைகளை ராஜராஜன் தான் மீட்டெடுத்தாரா ?

ப: பல சரித்திரச் சான்றுகளை வைத்துப் பார்க்கும்போது தேவார ஓலைகளை ராஜராஜன் மீட்டெடுத்த்திருக்க வாய்ப்புகள் மிக அதிகம்.

7) கே: தஞ்சைப் பெரிய கோயில் தளிக்குளத்தார் கோயில் மீது தான் கட்டப்பட்டதா ?

ப: இல்லை

8) கே: ராஜராஜனும், கருவூர்த்தேவரும் சமகாலத்தவர்களா ? ராஜராஜனின் ஆன்மிகக்குரு கருவூர்த்தேவரா ?

ப: இல்லை என்று பெரும்பாலானோரும், ஆம் என்று சிலரும் வாதிட்டனர். ராஜராஜனின் குரு என்று அறியப்படுபவர் ஈசான சிவபண்டிதரேயாவர்.

9) கே: ராஜராஜனின் காலத்திற்குப் பிறகு பெரிய கோயிலின் பணிகள் ஏன் முழுமையடையவில்லை ?

ப: அடுத்த மன்னரின் ஆட்சியின் போது விருப்பங்கள் மாறுகின்றன…!!

10) கே : ராஜேந்திர சோழன் ஏன் உடனடியாக தலை நகரை மாற்றினான் ? ராஜராஜன் நிவந்தங்களாக வழங்கிய கிராமங்களை ராஜேந்திர சோழன் மீண்டும் நிவந்தங்களாக வழங்கியது ஏன் ?

ப: இருவருக்குமிடையே ராஜராஜனின் பிற்காலத்தில் உரசல் இருந்திருக்குமா என்பதை அறுதியிட்டுக் கூற முடியவில்லை.

11) கே: ராஜராஜனின் பள்ளிப்படை எங்கு உள்ளது ?

ப: பள்ளிப்படை குறித்து திருமதி.பத்மாவதி நீண்ட விளக்கம் அளித்தார். சிவதீட்சை பெற்றதினால், ராஜராஜனின் பூதவுடல் நெருப்புக்கு இரையாக்கப்படாமல், சிவனின் பாதத்திற்கு அடியில் இறந்தவரின் தலை இருக்க வேண்டும் என்ற ஆகமத்தின் அடிப்படையில் இறந்த வரை உட்கார்ந்த நிலையில் பூமிக்கடியில் வைத்து, பூமிக்கு மேலே சிவலிங்கத்தை வைப்பது மரபு. அவ்வாறு எழுப்பப்படுபவையே பள்ளிப்படை என்றார். இதுவரை கிடைத்த தகவல்களின் அடிப்படையில் ராஜராஜனின் பள்ளிப்படை அமைந்துள்ள இடம் உடையாளுர் தானாம்.