பொன்னியின் செல்வன் வரலாற்றுப் பேரவையின் ஆடிப்பெருக்கு விழா – 2016

https://www.facebook.com/events/1464457410247104/

Arkay Convention Center, Mylapore
31 ஜூலை 01:30 PM – 05:30 PM
Here is the proposed Agenda: Date: 31/Jul/2016 (Sunday) (All the timings are IST) 1.30pm Invocation followed by Welcome Address 1.50pm Guest Lecture on Ponniyin Selvan related topic 2.30pm Group Members Introduction 3.00pm Guest Lecture on Historical topic 3.30pm Guest Lecture on PS/historical topic 4.00pm Panel discussion/Open House Interesting topics centering Ponniyin selvan 5.15 pm High Tea Guest Lecture Speakers: Mr.Sundar Bharadwaj Mr.Chandramowlesswaran Viswanathan
Friends, Our Beloved Mr. Chandramowleeswaran Viswanathan will be delivering Guest Lecture on 31/Jul/2016. Topic, he wants to keep that as a surprise, definitely on Ponniyin Selvan… So, please do attend.. Welcome…!!!

Updated – 2nd Aug 2016.  Review of the event from Muruganantham.

ஒத்த ரசனை கொண்ட குழுவினருடன் நேரம் கழிப்பதும், அதே ரசனை கொண்ட புதிய தோழமைகளின் அறிமுகமும் அவர்களுடனான கலந்துரையாடலும் ஒவ்வொரு மனிதனுக்கும் சுஹானுபவமே. அவ்விதமான சுஹானுபவத்தில் நாள்தோறும் இந்த குழுவில் நடைபெறும் இணையப் பதிவுகள், பின்னூட்டங்கள் வாயிலாக லயித்திருந்தாலும், நேருக்கு நேரான சந்திப்புகளும், அரட்டைகளும் இதற்கு ஈடிணையாகா ! அவ்விதம் அமைந்ததுதான் 31 ஜூலை 2016 அன்று ஆர் கே கன்வென்ஷன் சென்டர் (மைலாப்பூர், சென்னை) எனுமிடத்தில் நடந்த இத்திருவிழாவும்.

வழக்கமாக ஆடிப்பெருக்கையொட்டி நமது ‘பொன்னியின் செல்வன் வரலாற்றுப் பேரவை’ அமைப்பின் சார்பாக வார இறுதி நாட்களில் ஒரு கலந்துரையாடல் சார்ந்த விழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டும், இவ்விழாவிற்கான அடிச்சொல் விதை நமது நண்பரும், இவ்வமைப்பின் முக்கிய தூண்களில் ஒருவருமான திரு.வெங்கடேஷ் (எழுத்தாளர் அனுஷா வெங்கடேஷ்) அவர்களின் இல்லத் திருமண வரவேற்பு நிகழ்ச்சி (ஜூன் மாத மத்தியில்) அன்று விதைக்கப்பட்டது. விதைத்தவர் வேறு யாருமல்ல, நமது அமைப்பின் நிறுவனத் தலைவர் திரு.சுந்தர் பரத்வாஜ் (சிவபாதசேகரன் – SPS என்று நம்மால் அழைக்கப்படுபவர்தான்).

அன்றிலிருந்து இந்த விழாவுக்கான ஏற்பாடுகள் குறித்த கலந்துரையாடல்கள், செயல்திட்டங்கள் என்று அனைத்தும் முக்கிய உறுப்பினர்கள் மத்தியில் தொடங்கிவிட்டன. பலவித யோசனைகள், ஆலோசனைகள் ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு வரைவு நிகழ்வு நிரல் அமைக்கப்பட்டு அதனைச் செயல்படுத்தக் களத்தில் இறங்கினோம்.

விழாவுக்கு மிக முக்கிய அம்சமான அரங்கைத் தெரிவு செய்து, அதனை உறுதி செய்ததில் முழுப்பங்கும் திரு.வெங்கடேஷ் தான். அவருக்கு நமது குழு சார்பாகக் கோடானு கோடி நன்றிகள். அதுமட்டுமல்லாது, விழா நிகழ்வு நிரல் குறித்து தகுந்த ஆலோசனைகளையும், கருத்துக்களையும் வழங்கி இந்த விழா சிறப்பாக நடைபெற அவர் வழங்கிய அத்தனை உதவிகளையும் நாம் இங்கு குறிப்பிட்டு நன்றி பாராட்ட வேண்டும்.

ஜூலை மாதம் முழுக்க நிகழ்வு குறித்து core group member-களிடையே அலைபேசி, மின்னஞ்சல் என்று பல தகவல் தொடர்புகள் வாயிலாக விழா ஏற்பாடுகள் செயல்படுத்தப்பட்டன. ஆளுக்கு ஒரு வேலை என்று பங்கு போட்டுக் கொண்டு செய்வது என்று முடிவெடுக்கப்பட்டாலும், பர்வதவர்தினி, ஸ்வேதா, சதீஷ்குமார் அருணாச்சலம், ராஜா ஆகியோரே பெரும்பணிகளை முடித்திருந்தனர். எல்லாவற்றையும் பின் நின்று இயக்கியது நமது அருமை SPS அவர்கள் என்றால் மிகையில்லை.

விழாவுக்கு வந்திருந்த பார்வையாளர்கள் ஒவ்வொருவரும் அறிமுகம் செய்து கொண்டு, தாங்கள் எவ்விதம் பொன்னியின் செல்வனால் ஈர்க்கப்பட்டோம், எப்படி குழுவில் இணந்தோம் என்று பகிர்ந்து கொள்ளும் வழக்கமான நிகழ்ச்சி நேரமின்மை காரணமாக கடந்த ஆண்டு நிகழ்வில் நடக்கவில்லை. எனவே, இந்த முறை குழுவின் உறுப்பினர்கள் அதிகம் பங்கு பெறும் வகையில் நிகழ்வுகள் அமையுமாறு பார்த்துக் கொண்டோம்.

விழாவில் சிறப்புரையாற்ற திரு.சந்திரமௌளீஸ்வரன் விஸ்வநாதன், திரு. சுந்தர் பரத்வாஜ், திரு.ஷஷ்வத் (மூவரும் வெவ்வேறு சுவாரஸ்யமான தலைப்புகளில்), வினாடி-வினா நிகழ்ச்சி, கலந்துரையாடல் என்று 4 மணி நேரத்தில் ஒரு வினாடிகூட வீணாகாதவாறு நிகழ்ச்சி நிரல் அமைக்கப்பட்டிருந்தது.

Facebook தளத்தில் Event உருவாக்கப்பட்டு, பொன்னியின் செல்வனின் அனைத்துக் குழுக்களிலும் இது குறித்தும் பகிரப்பட்டு, தொடர்ச்சியாக நினைவூட்டல்களும் Facebook மற்றும் Yahoo groups தளங்களில் தகவல்கள் பரிமாறினோம்.

விழாவுக்கு முதல் நாள் திரு.வெங்கடேஷுக்கு தனிப்பட்ட, தவிர்க்க முடியாத காரணத்தினால் சிறு சிக்கல் எழுந்து அவரால் கலந்து கொள்ள முடியாத சூழல் ஏற்பட்டாலும், ஒரு மாதிரியாகக் கடந்து அவர் விழாவில் கலந்து கொண்டது நாம் செய்த பாக்கியமே. அதேபோல், தொடர்ந்து பயணம் செய்த களைப்பிருந்தாலும் 31-ஆம் தேதி காலைதான் சென்னையை அடைந்திருந்த SPS-ம் பயண அலுப்பைத் தூரப்போட்டு சரியாக 1.15 மணிக்கு அரங்கிற்கு வந்துவிட்டார்.

நிற்க, இப்பொழுது நாம் நேரடியாக விழாவிற்குச் செல்வோமா ?

“ஆதி அந்தமில்லாத கால வெள்ளத்தில் கற்பனை ஓடத்தில் ஏறி நம்முடன் சிறிது நேரம் பயணிக்குமாறு…..”

நேரத்தை வீணாக்கக் கூடாது என்ற நோக்கில் 1.30 மணிக்கு ஆரம்பிக்கலாம் என்று நிகழ்ச்சி நிரல் அமைக்கப்பட்டிருந்தது. அரங்கிற்கு 12.45 மணிக்கு முக்கிய அமைப்பாளர்கள் கூடி, முன்னேற்பாடுகளை முடிக்க வேண்டும் என்று தீர்மாணித்திருந்தாலும் என்னால் 1 மணிக்குத் தான் அரங்கிற்கு வர முடிந்தது. நமது சிறப்பு விருந்தினர் திரு.சந்திரமௌளீஸ்வரன் விஸ்வனாதன் 12.20 மணிக்கே அரங்கிற்கு வந்துவிட்டிருந்தார். 12.30க்கு என்னை அலைபேசியில் அழைந்திருந்தார். வாகனத்தைச் செலுத்திக் கொண்டிருந்ததால் என்னால் பேச முடியவில்லை. 1 மணிக்கு அரங்கின் வெளியே இருந்து உள்ளே பார்த்தேன். அரங்கினுள் 25 பேர் ! நான் அப்டியே ஷாக்காயிட்டேன் ! என்னடா இது மைலைக்கு வந்த சோதனை என்று! அப்புறம் தான் தெரிந்தது முந்தைய நிகழ்ச்சி முடிந்து இறுதியாகக் கலைந்து செல்லப் போகிறவர்களென்று.

அரங்கினுள் ராஜா அப்பொழுதே வந்துவிட்டிருந்தார். திரு.மௌலியிடம் மன்னிப்புக் கோரினேன். அவர் பெருந்தன்மையாக, ‘நான் தான் சீக்கிரம் வந்துவிட்டேன்’ என்றார். மேலும், ‘இரண்டு நாட்களாக உடல் நலம் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தேன். Heavy dose of antibiotic உட்கொண்டு, இந்த விழாவில் கட்டாயம் கலந்து கொள்ளும் உத்வேகத்தினாலும், ஆர்வத்தினாலும் வந்துவிட்டேன்’ என்றபோது உண்மையிலேயே நெஞ்சம் பதறினாலும், கல்கி/பொன்னியின் செல்வனின் ஈர்ப்பு எவ்வளவு ஆழமானது என்று புரிந்து கொண்டேன்.

தொடர்ந்து SPS, பர்வதவர்தினி, ஸ்வேதா, வெங்கடேஷ் என்று முக்கிய உறுப்பினர்கள் தொடங்கி ஏனைய உறுப்பினர்களும் வர ஆரம்பித்தனர். 2 மணிக்குத் தொடங்கலாம் என்று முடிவெடுத்தோம்.

பர்வதவர்தினியின் “பொன்னார் மேனியனே’ என்ற அருமையான தேவாரப்பாசுரத்துடன் விழா இனிதே தொடங்கியது.

சதிஷ்குமார் அருணாச்சலத்துடன் மிக இயல்பான வரவேற்புரை அனைவரையும் கவர்ந்தது. Yahoo Group-ஆகத் தொடங்கப்பட்ட குழு, கடந்த 11 ஆண்டுகளுக்கு மேலாகக் கடந்து வந்த பாதை குறித்து பகிர்ந்து கொண்டார். குழுவின் ஆரம்ப கால உறுப்பினர்களான திரு.SPS, திரு.ஸ்ரீதர் ரத்தினம், திரு. கோகுல் சேஷாத்ரி, திரு. கமலக்கண்ணன், திரு.லலிதா ராம் உள்ளிட்டோர்களின் பங்களிப்பை மிகச்சிறப்பாக நினைவு கூர்ந்தார்.

2005-ல் இந்த குழு வேகம் பிடித்ததையும், பல பயணங்களையும் அதைச் சார்ந்த சுவாரஸ்ய சம்பவங்களையும் மேற்கோள் காட்டினார்.

குழுவில் உள்ள எழுத்தாளர்கள் மற்றும் அவர்களது படைப்புகள் குறித்தும் விவரித்தார். குறிப்பாக பொன்னியின் செல்வன் தொடர்ச்சியாகக் கருதப்படும் ‘காவிரி மைந்தன்’ நாவலாசிரியர் திரு.அனுஷா வெங்கடேஷ், ‘வம்சதாரா’, ‘எம்டன்’ உள்ளிட்ட சுவாரஸ்ய நாவல்களைப் படைத்த திரு.திவாகர் வெங்கட்ராமன், ‘சேரர் கோட்டை’, ‘ராஜகேசரி’ உள்ளிட்ட நாவல்களை எழுதிய திரு.கோகுல் சேஷாத்ரி, ‘மலர்ச்சோலை மங்கை’, ‘Revenge’ போன்ற பல படைப்புகளை வழங்கிய டாக்டர். லக்ஷ்மன் கைலாசம் என்று நீண்ட பட்டியலை நினைவுகூர்ந்தார்.

குழுவின் முக்கிய உறுப்பினரான திரு.விஜயகுமார் (Poetry in stone) அவர்களின் மகத்தான பணி குறித்தும் குறிப்பாக சமீபத்தில் அமெரிக்காவிலிருந்து சிலைமீட்புப்படலத்தின் பின்புலத்தில் அவர் ஆற்றிய பங்கு குறித்தும் விவரித்தார். Reach Foundation என்ற அமைப்பின் மூலம உழவாரப்பணி செய்து வரும் நம் குழுவின் முக்கிய உறுப்பினர் திரு.சந்திரசேகரின் மகத்தான பணிகளையும் குறிப்பிட்டார்.

குறிப்பாக பொன்னியின் செல்வன் நாவலினால் ஈர்க்கப்பட்டு Raw History என்று கருதப்படும் தீவிர வரலாற்று ஆராய்ச்சியில் ஈடுபட்டு வரும் வரலாறு.காம் தளத்தை நிர்வகிப்பவர்கள் பொன்னியின் செல்வன் குழுமத்தின் உறுப்பினர்கள் என்பதில் பெருமை என்றும் சதீஷ் குறிப்பிட்டார்.

வரவேற்புரை முடிந்ததும் உடனடியாக சிறப்புரைக்குச் செல்லாமல் பழைய, புதிய உறுப்பினர்களிடையே இருந்ததாகக் கருதப்பட்ட மாயத்திரையை விலக்க பர்வதவர்தினி, வம்சி ப்ரியங்கா இணைந்து வழங்கிய 25 கேள்விகள் அடங்கிய அற்புதமான வினாடி-வினா நிகழ்ச்சி உண்மையிலேயே Top Class..!! கேள்விகளைத் தயார் செய்ததில் அபாரத்தைக் காட்டியிருந்தார் பர்வதவர்தினி; அதனைவிட அனைத்துக் கேள்விகளையும் ‘கோடீஸ்வரர்’ நிகழ்ச்சி பாணியில் powerpoint presentation வடிவத்தில் அமைத்துக் கொடுத்த அவரது கணவர் முரளிகிருஷ்ணனுக்கு நமது குழுவின் சார்பாக சிரம் தாழ்ந்த வணக்கங்களும், நன்றிகளும் !

கேள்விகளும், பதில்களும் உற்சாகத் துள்ளல் கொள்ள ஆரம்பித்தது விழா !

தொடர்ந்து திரு.மௌலியின் சிறப்புரை. தனது தலைப்பு குறித்து சஸ்பென்ஸ் வைத்திருந்த மௌலி, பொன்னியின் செல்வன் குறித்து தன்னுடைய நிலைப்பாட்டை, தனக்கே உரித்தான பாணியில் அற்புதமாக விவரித்தார்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் பொன்னியின் செல்வன் ஆடியோ வடிவத்தை அவருக்கு அன்பளிப்பாக வழங்கியவர் (பெயர் குறிப்பிடப்படவில்லை !) மௌலியிடம் 10 நாட்களுக்கு ஒருமுறை அதனைக் கேட்டுவிட்டாரா ? அவர் என்ன நினைக்கிறார் என்று தொலைபேசியில் கேட்டாராம். இவரும் இன்னும் கேட்கவில்லை என்று மறைமுகமாகத் தட்டிக் கழித்தாராம். பொறுத்துப் பார்த்த அவர் நேரடியாக மௌலியின் இல்லத்திற்கே சென்று அன்புத் தொல்லை கொடுக்க, ‘நான் அந்த ஆடியோவைக் கேட்க மாட்டேன்’ என்ற மௌலி, இந்த விஷயத்தில் தான் துருவன் என்றாராம்.

துருவன் மஹாவிஷ்ணுவை எண்ணித் தவம் செய்தபோது, மஹாவிஷ்ணுவே நேரில் பிரசன்னமாகி அருள்பாலிக்க முயற்சித்தபோது அதனை துருவன் சட்டை செய்யவில்லை; மஹாவிஷ்ணு நாரதரிடம் இது குறித்து வினவ அதற்கு நாரதர், ‘துருவனின் மனதில் மஹாவிஷ்ணு குறித்து ஒரு பிம்பம் இருக்கும். அவன் கண் விழிக்கும்போது அந்த பிம்பத்துடன் உண்மையான மஹாவிஷ்ணுவே பிரசன்னமானாலும் ஒத்துப் போகவில்லையென்றால் துருவனால் ஏற்றுக் கொள்ள முடியாது’ என்றாராம்.

அதைப் போலவே பொன்னியின் செல்வன் நூல் குறித்து ஒவ்வொரு வாசகரின் மனதிலும் ஒரு பிம்பத்தைக் கல்கி உருவாக்கியிருக்கிறார். அதற்கு உயிர் கொடுப்பதென்பதோ, காட்சிப் படுத்துவது என்பதோ அந்த தனிப்பட்ட பிம்பம்/தோற்றம் ஆகியவற்றுக்குச் செய்யப்படும் குறைபாடாகவே தான் கருதுவது என்று மௌலி முத்தாய்ப்பாகச் சொன்னபோது அரங்கில் இருந்த ஒவ்வொருவரும் தங்களை அறியாமல் தலையசைத்து ஆமோதித்தனர். காரணம், சந்தேகத்திற்கிடமின்றி இது உண்மைதானே ?

தொடர்ந்து பொன்னியின் செல்வனை இளைய தலைமுறையிடம் கொண்டு செல்லவேண்டியதின் அவசியம் குறித்துப் பேசிய மௌலி, தனது மகள் (கல்லூரியில் முதலாண்டு) பொன்னியின் செல்வன் நூலைப் படித்துப் பகிர்ந்து கொண்டதைப் பற்றியும் கூறினார். இந்த நிகழ்வு தனது மகள் உருவாக்கித் தந்த ppt presentation வழங்கிய மௌலி, ஆச்சரியப்படத்தக்க வகையில் பொன்னியின் செல்வனில் தன்னை ஈர்த்த முக்கிய சம்பவங்கள் எவ்விதம் தன் மகளையும் ஈர்த்தது என்று வியந்ததாகக் கூறினார். அதுதான் கல்கி !

தொடர்ந்து கேள்வி-பதில் மௌலியிடம். பதில் என்று சொல்ல முடியாது; காரணம், கேள்வியையே மற்ற பார்வையாளர்களிடம் மடை மாற்றி விட்ட மௌலியின் நேர்த்தி !!

மிக மிக சுவாரஸ்யமான பங்களிப்பு மௌலியிடமிருந்து; குழுவின் சார்பாக நெஞ்சம் நிறைந்த நன்றி.

தொடர்ந்து திரு.SPS அவர்களின் PhD thesis குறித்து உரையாற்ற வந்தார். குழுவிற்குப் பெரும்பங்காற்றிவரும் திரு.வெங்கடேஷை உரிமையோடு அழைத்துப் பேசச் சொன்னார். ரத்தினச் சுருக்கமாகவும், நகைச்சுவை கலந்தும் தனது வழக்கமான கலகலப்பான பாணியில் வெங்கடேஷ் சபையைச் சிரிப்பிலாழ்த்தினார்.

தொடர்ந்து சுந்தர் கிருஷ்ணன், வரலாற்று நாவல்களின் Encyclopedia என்று அழைக்கலாம் இவரை. 900 வரலாற்று நாவல்கள் உள்ளதாகவும், அதில் 800 நாவல்களைச் சேகரித்து விட்டதாகவும், Scan செய்து Soft copy ஆக பாதுகாத்து வைத்திருப்பதாகவும் கூறினார். பதிப்பகம் மற்றும் எழுத்தாளரின் copyright சார்ந்து மீள்பதிப்புக்கு முயற்சியில் ஈடுபட்டிருப்பதாகவும் குறிப்பிட்டார்.

அவரைத் தொடர்ந்து திரு Sridharan Krishnappa அவர்கள் வரலாற்றாய்வு குறித்து தனது நீண்ட அனுபவங்களை மிகச் சுவையாகக் குறிப்பிட்டார். அடுத்து வரும் நிகழ்வுகளின் அன்னாரின் சிறப்புரை நமது குழுவிற்கு நிச்சயம் ஒரு விருந்தாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

ராஜராஜன் மீது அளவுகடந்த வெறி கொண்ட SPS தனது முனைவர் பட்ட ஆய்வு குறித்து Teasar தான் வெளியிட்டார் என்று கூறவேண்டும். நம்மைச் சுவாரஸ்யத்தின் உச்சத்திற்கு அழைத்துச் சென்று அப்படியே அங்கேயே பரவச நிலையிலேயே நிறுத்திவிட்டு, தனது உரையை முடித்துக் கொண்டார் SPS. இன்னும் பேசமாட்டாரா, தகவல்களை வழங்கமாட்டாரா என்று பார்வையாளர்களை ஏங்க வைத்துவிட்டார்.

குறிப்பாக, காந்தளூர்ச்சாலைக்கும், ராஜராஜ சோழனுக்குமான புதிய பரிமாணத்தைப் பகிர்ந்து கொண்டு நம்மை மெய் சிலிர்க்க வைத்துவிட்டார். ராஜராஜனின் மீதான இவரது அதீத பிரேமை புரிந்த நமக்கு இது ஆச்சரியமில்லை. ஆனால் புதிய உறுப்பினர்கள் ‘ச்சும்மா அதிருதுல்ல..’ ஃபீலிங்க் தான்..!!! We are waiting for Main picture, SPS sir…!!

அடுத்து திரு.ஷஷ்வத்தின் சிறப்புரை. வரலாற்று நாவல் எத்தனை வகைகள், அவை எப்படி எழுதப்பட்டால் நல்லது, வரலாற்றாசிரியர்கள் மற்றும் வரலாற்று நாவலாசிரியர்கள் ஆகியோருக்கிடையிலான வேறுபாடுகள், வரலாற்றாசிரியர்கள் எவ்வளவு தூரம் வரலாற்றில் கற்பனை கலந்து கொள்வது நல்லது அதிலும் குறிப்பாக தவறான தகவல்களைக் கற்பனை என்று பொய்யான உரிமையில் வரலாற்று நாவலாசிரியர்கள் செய்யக் கூடாதவன என்று விரிவாகத் தகுந்த உதாரணங்களுடன் விளக்கியது அபாரம். இறுதியில், வாசகர் ஒவ்வொருவரும் வரலாற்று நாவல்களின் பங்கு குறித்தும் விளக்கியது அருமை. நாவல்களில் வரும் அத்தனையையும் உண்மை என்று நம்பக்கூடாதென்று குறிப்பிட்ட ஷஷ்வத், நாவல்களை ரசியுங்கள் – அதே நேரத்தில் உண்மையை அறிந்து கொள்வதிலும் ஆர்வம் காட்டுங்கள் என்று முடித்தார். நன்றிகள் பல, ஷஷ்வத்.

இதற்குள், ஐந்து மணியைத் தாண்டிவிட்டதால் ‘சிறப்புத் தலைப்புகளிலான கலந்துரையாடல்’ நிகழ்ச்சியைக் கைவிட்டு, அனைத்து உறுப்பினர்களின் அறிமுகப்படலம் நடந்தது. பல புதிய உறுப்பினர்கள், குறிப்பாக திருச்சியிலிருந்து வந்த அன்பர், பொன்னியின் செல்வனை இனிமேல் தான் படிக்கப்போகிறேன் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் வாயிலாக என்று குறிப்பிட்ட புதியவர்கள் என்று அற்புதமாக அமைந்தது.

திரு.ஜெ.ராம்கி தனது இரண்டு நூல்களான ‘ரஜினி’, ‘மு.க’ ஆகியவற்றை எழுதியபோது நிகழ்ந்த சுவையான நிகழ்வுகளைப் பகிர்ந்து கொண்டார்.

ஸ்வேதா தனது நன்றியுரை நல்க, தொடர்ந்து தேசிய கீதத்துடன் விழா இனிதே நிறைவடைந்தது.

மீண்டும் ஒரு அற்புதமான தருணத்தில் அனைவரும் சந்திப்போம்..!!
பொன்னியின் செல்வன் ராஜராஜன் புகழ் ஓங்குக..!! சோழம்… !!! சோழம்..!!!